சட்டப்பேரவையில் சபாநாயகர் திமுக எம்.எல்.ஏ-க்களை வெளியேற்றியதற்கு கண்டனம் தெரிவித்து, சேலம் சங்ககிரியில் திமுகவினர் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில், தொண்டர் ஒருவர் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இது அங்கிருந்த திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 18 ஆம் தேதி சட்டசபையில் புதிதாக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதில் திமுகவினர் ரகசிய வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து சபாநாயகர் சட்டசபை காவலர்கள் மூலம் திமுகவினரை ஒட்டுமொத்தமாக வெளியேற்றினார். இதில் திமுகவினர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் சபாநாயகர் ஒருதலைப்பட்சமான முடிவை மேற்கொள்கிறார் எனவும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கிழிந்த சட்டையோடு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
இந்நிலையில் சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி சேலம் சங்ககிரியில் சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ-க்களை வெளியேற்றியதற்கு கண்டனம் தெரிவித்து, திமுகவினர் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதாக கூறி கண்டனம் தெரிவித்து, இருகாலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற தொண்டர், திடீரென தன் கையில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை நிர்வாகிகள் சமாதானம் செய்து தற்கொலை முயற்சியை தடுத்தனர்.
