அதிமுகவில் இளம்பெண்கள் பாசறை உள்ள நிலையில் திமுகவிலும் அது போன்ற அமைப்பை உருவாக்க உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திமுக இளைஞரணியின் செயலாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற நடிகரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியை புத்துணர்ச்சியுடன் கொண்டு செல்கிறார் என்ற தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உதயநிதியே நேரில் சென்று இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்ப்பது, இளைஞரணியின் சார்பில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் நடத்துவது, இளைஞரணி நிர்வாகிகளை மாற்றி இளம் ரத்தங்களுக்கு பதவி கொடுத்து வருவது ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், திமுகவில் இளம் பெண்கள் பேரவை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கீழ் இம்மாத இறுதியில் இளம்பெண்கள் பேரவை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. 

மேலும், முற்போக்குச்சிந்தனையுடன் களத்தில் செயல்படும் 7 பெண்கள் மாநில துணை செயலாளர்களாக தேர்வு செய்யப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக தலைமை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.