கோயில் அறங்காவலர்களாக திருட்டுத்தனமாக கரைவேட்டிக்காரர்கள்... திமுக அரசை வறுத்தெடுக்கும் ஹெச்.ராஜா!
இந்தப் பணிகளை எல்லாம் கோயில் நிதியில் செய்யாமல், மீன் மார்க்கெட் கட்டுவது போன்ற பணிகள் வாயிலாக இந்துக்களுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது.
கோயில்களில் திருட்டுத்தனமாக கரை வேட்டிக்காரர்களை அறங்காவலர்களாக நியமிப்பதற்கான முயற்சி நடக்கிறது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
ஹெச்.ராஜா சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்து கோயில்களை முழுதுமாக சட்ட விரோதமாக அழித்து விடுவது என்று திமுக அரசு முனைப்பு காட்டி செயல்பட்டு வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கோயில் நகைகளை உருக்குவது, கோயில் பணத்தில் கல்லுாரிகள் கட்டுவது என திமுக அரசு அறிவித்தது. ஆனால், அறங்காவலர் இல்லாமல் இவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. அதை மதித்து நடக்க வேண்டும். எந்த கோயில்களிலும் நிதியே இருக்க கூடாது என்று திமுக அரசு செயல்படுகிறது. கோயில் சொத்துக்கள், நிலங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு உதவி ஆணையர் அலுவலகத்தில் கம்ப்யூட்டரை வைக்க குறைந்த செலவே ஆகும். ஆனால், இந்தப் பணிகளை எல்லாம் கோயில் நிதியில் செய்யாமல், மீன் மார்க்கெட் கட்டுவது போன்ற பணிகள் வாயிலாக இந்துக்களுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது. கோயில் அறங்காவலர்கள் நியமனமும் வெளிப்படை தன்மை இல்லாமலேயே நடக்கிறது. அறங்காவலர் குழுவில் மகளிர், பட்டியல் இனத்தவர்கள் உள்ளிட்டோரும் இருக்க வேண்டும். ஆனால், இந்த விபரங்கள் எதுவுமே விண்ணப்பங்களில் இல்லை. விண்ணப்பங்களில் குறைபாடு இருந்ததை அரசே நீதிமன்றத்திலும் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து, அறநிலையத் துறை ஆணையரும், அமைச்சரும் எவ்வளவு மோசமாக நடக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அறங்காவலர்களாக அரசியல் பின்னணி உடையவர்கள் இருக்கக் கூடாது. தெய்வ பக்தி உடையவர்கள்தான் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை அறங்காவலர் நியமனம் தொடர்பான சுற்றறிக்கை, விண்ணப்பங்கள், இணையதளத்தில் எதுவும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. திருட்டுத்தனமாக கரை வேட்டிக்காரர்களை அறங்காவலர்களாக நியமிப்பதற்கான முயற்சிதான் இது” என்று ஹெச். ராஜா தெரிவித்தார்.