ஒரு மனுஷன் வாழும்போது பேசாத அவரது அருமை பெருமைகளை, இறந்த பின் சொல்லிச் சொல்லி கண்கலங்குவதுதான் தமிழன் தாறுமாறு பண்பாடு. அந்த வகையில் கருணாநிதி மறைந்த பின்  அவரைப் பற்றிய நெகிழ்ச்சியான விஷயங்கள் பலவற்றை சொல்லி கலங்கிக் கொண்டிருக்கிறது தமிழகம். 

அதில் மிக முக்கியமானது, கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் பிரிந்த பின் இருவருக்கும் இடையில் மிக மோசமான அரசியல் விரோதம் இருந்ததாகவே கருணாநிதி இருந்த வரையில் சித்திரப்படுத்தப்பட்டு வந்தது. அப்படியில்லை! என்று கருணாநிதி மறுத்தபோதும் அதை ஏற்க யாரும் தயாரில்லை. ஆனால் அவர் இறந்த பின், அந்த விஷயத்தை மெய்ப்பிக்கும் விதமாகவே பலவற்றை, பல ஆளுமைகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். 

‘எம்.ஜி.ஆரை சினிமாவில் பெரிதாய் சாதிக்க வைக்க, கருணாநிதி தனது எழுத்து திறமையை மிக கூர்மையாக பயன்படுத்தினார்!, கருணாநிதி சொன்னதற்காகவே தனது சில பழக்கங்களை எம்.ஜிஆர். விட்டுக் கொடுத்தார்!’ என்றெல்லாம் வரிந்து வரிந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

இதுமட்டுமா?...’சினிமா நிறுவனம் நடத்தி நஷ்டப்பட்ட கருணாநிதி, கடனுக்காக தன் கோபாலபுரம் வீட்டை அடமானம் வைத்தார். அந்த வீடு ஜப்தியாக இருந்த நிலையில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவரும் ஒரு படத்தில் நடித்து பெற்ற  பணத்தை கொடுத்து அதை மீட்டுத் தந்தனர்.’ என்கிற தகவலை கேட்டு தமிழ்நாடே உறைந்தது. 

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த பல மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் எம்.ஜி.ஆர்., ஜெ., சமாதிக்கு அடுத்து கருணாநிதி சமாதியிலும் போய் நின்று அஞ்சலி செலுத்தினர். 

தங்கள் தோளிலும், கழுத்திலும், வேட்டி கரையிலும் அ.தி.மு.க.வின் நிறம் இருப்பதை பற்றி அலட்டிக் கொள்ளாமல் அவர்கள் அஞ்சலிக்கு நின்ற விதம் தி.மு.க.வினரையே கலங்க வைத்துவிட்டது. அங்கே பாதுகாப்புக்கு நின்ற ஒரு போலீஸ் இதை போட்டோ எடுத்து தி.மு.க.வின் முக்கிய நிர்வாகி ஒருவருக்கு அனுப்ப, அவர் ஸ்டாலினுக்கு சேர்பித்தாராம். இதைப் பார்த்து ஸ்டாலினும் நெகிழ்ந்து போனாராம். 

ஆம்! கறுப்புக்கும், சிவப்புக்கும் நடுவில் ஒரு வெள்ளை கோடிட்டுவிட்டால் உயிர்நட்பு அழிந்திடுமா என்ன?