பச்சைத் துண்டு அணிபவர்கள் எல்லாம் விவசாயிகள் ஆகிவிட முடியாது என அமைச்சர் சி.வி சண்முகம் முக. ஸ்டாலினை விமர்சித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் 938 பயனாளிகளுக்கு 1 கோடியே 73 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் வழங்கினார். அதில் ஏராளமான கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியார்களை சந்தித்த அவர் கூறியதாவது. 

பச்சைத் துண்டு அணிந்தவர்கள் எல்லாம் விவசாயிகள் ஆகிவிட முடியாது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி விவசாயி என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.  அதேபோல் ஊழலைப் பற்றி பேசுவதற்கும் திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை, ஏனென்று சொன்னால் திமுக என்றாலே விவசாயிகளின் நிலத்தை அபகரிப்பவர்கள். விவசாயிகளின்  வீட்டை அபகரிக்க மட்டுதான் அவர்களுக்கு தெரியும். மேலும் 2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மக்களின் கோடிக்கணக்கான பணத்தை ஊழல் செய்தது அனைவருக்கும் தெரியும். 

அதுவும் வருகின்ற 5ஆம் தேதி முதல் 2ஜி வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் தினமும் வழக்கு நடைபெறும் என்று நீதிமன்றமே கூறியுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எனவே ஊழலைப் பற்றி  பேச திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை. இவ்வாறு அமைச்சர் சி.வி சண்முகம் கூறினார்.