2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிரசாந்த் கிஷோருடன் இணைந்து செயல்பட திமுக முடிவெடுத்துள்ள நிலையில், அது மூத்த தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலை திமுக ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளது. கடந்த ஆண்டு கிடைத்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை மீண்டும் அடைய திமுக தலைமை காய் நகர்த்திவருகிறது. ரஜினியின் அரசியல் வருகை, கூட்டணி கணக்கு போன்றவையும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, இதையெல்லாம் தாண்டி எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்போடு உள்ளது.
அதற்காக தேர்தல் வியூக மன்னர் என்றழைக்கப்படும் பிரஷாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் திமுக இணைந்துள்ளது. அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “தமிழம் இழந்த பெருமையை மீட்டு முன்பைபோல வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளோம்” என்று அறிவித்திருந்தார். திமுகவின் இந்த முன்னெடுப்பை அரசியல் கட்சிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சித்துவரும் நிலையில், பழைய திமுகவினருக்கு இந்தப் போக்குப் பிடிக்கவில்லை என்ற கருத்தும் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டுவருகிறது.   
திமுக என்பது அடித்தளம் வரை கட்டமைப்பும் தொண்டர்களும் உள்ள கட்சி.  அதுபோன்ற ஒரு கட்சியில் கார்ப்பரேட் தேர்தல் நிறுவனங்கள் என்ன சாதிக்க முடியும் என்ற கருத்தும் வைக்கப்படுகிறது. திமுகவின் இந்த அறிவிப்பு திமுகவில் கீழ்மட்டத்தில் உள்ள நிர்வாகிகள் பலருக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மூத்த கட்சித் தொண்டர் ஒருவர் கூறுகையில், “திமுக  தலைமையின் இந்த முடிவு தொண்டர்களிடம் கட்சி விலகி செல்வதாகவே உள்ளது. அவ்வளவு பெரிய கட்சியான திமுக, வெளியிலிருந்து செயல்படும் ஒரு நிறுவனத்தின் வழிகாட்டுதலை எதிர்பார்ப்பது தமிழக அரசியலில் இதற்கு முன்பு காணாத ஒரு விஷயம். இது தலைமையின் இயலாமை, கட்சியின் கீழ்மட்ட தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.” என்று கூறினார்.

 
இதேபோல கட்சியின் நீண்டகால பேச்சாளர் ஒருவர் கூறுகையில், “கடந்த 5 ஆண்டுகளாகவே கட்சியின் கீழ்மட்ட  தொண்டர்களின் கருத்தைக் கேட்டு கட்சி செயல்படவில்லை. இதற்கு உதாரணமாக, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் இரண்டு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுவும் கட்சித் தொண்டர்களின் கடும் போராட்டத்தையடுத்து வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்” என்று தெரிவித்தார்.
கட்சிக்குள் இதுபோன்ற மாறுப்பட்ட கருத்து எழுந்தாலும், இந்த சமூக ஊடக யுகத்தில், தேர்தலில் வாக்களிப்போர் மத்தியில் சமூக ஊடகங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் சூழலில், இதுபோன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் பணி கட்சிக்கு உதவும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், கட்சித் தலைமையை சமூக ஊடகங்களில் முன்னிலைப்படுத்துவதோடு இந்த நிறுவனத்தின் பணி முடிந்துவிடுவதில்லை. 
இதற்கு முன்பு இந்நிறுவனம் சேர்ந்து பயணித்த தேர்தல்களில், வேட்பாளர்கள் தேர்வுவரை  பங்களித்துள்ளது. திமுகவில் கட்சித் தலைமைக்கு பிறகு அதிகாரமிக்கவர்களாக மாவட்ட செயலாளர்கள்தான் உள்ளனர். கட்சி  தலைமையின் முடிவில் அவர்களுடைய பங்களிப்பும் இருக்கும். குறிப்பாக தேர்தல் காலத்தில் வேட்பாளர் தேர்வில் முக்கிய பங்கு வகிப்பார்கள். வேட்பாளர் தேர்வில் மாவட்ட செயலாளர்கள், பிரசாந்த் கிஷோர் நிறுவனம் என இரு தரப்பும் அதிகாரத்தைச் செலுத்தும்போது குழப்பம் ஏற்படவும் செய்யும் என்றும் இது பெரும் சவாலாக இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.