மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக எம்.பிக்கள் இன்று நாடாளுமன்றத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர். திமுக கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

 

திமுக கூட்டணியை சேர்ந்த 37 எம்பிகளும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். எம்.பி ஜெயக்குமார், கலாநிதி வீராச்சாமி, தமிழச்சி தங்கபாண்டியன் தயாநிதி மாறனும் தமிழில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். அப்போது ‘வாழ்க தமிழ், வாழ்க கலைஞர், வாழ்க பெரியார்’ என தயாநிதி மாறன் கூறினார்.

’உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என கோவை எம்.பி பதவியேற்றுக் கொண்டார் ’காந்தி, அம்பேத்கர், பெரியார், காமராஜ் வாழ்க’ என்று ஜெயகுமார் பதவி ஏற்றுக் கொண்டார். கருப்பு ஆடை அணிந்து கொண்டு பதவியேற்றுக் கொண்ட தர்மபுரி எம்.பி செந்தில் குமார் ‘திராவிடம் வெல்க’ என பதவியேற்றுக் கொண்டார். திருப்பூர் சுப்பராயன், ஆரணி எம்.பி விஷ்ணு பிரசாத், கரூர் எம்.பி ஜோதிமணி என அனைவரும் தமிழில் பதவி ஏற்றுக் கொண்டனர். 

பாரிவேந்தர் தமிழ் வாழ்க... இந்தியாவும் வாழ்க எனக் கூறி பதவி ஏற்றுக் கொண்டார். திருமாவளவன் பதவியேற்றுக் கொள்ளும்போது ’வாழ்க பெரியார் அம்பேத்கர்... வெல்க ஜனநாயகம் சமத்துவம்’ எனக் கூறினார். சில எம்பிக்கள் மு.க.ஸ்டாலினை ‘தளபதி வாழ்க’ எனக் கூறி பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தில் ஹிந்தியை கொண்டு வர மத்திய அரசு முயன்று வருவதாக கூறப்பட்ட நிலையில் ஹிந்திக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது திமுக. அதேபோல் கடவுள் மறுப்பு கொள்கையை கொண்ட பெரியார் பெயரையும் நாடாளுமன்றத்தில் உரக்க முழக்கமிட்டனர்.