மாநிலங்களவையில் 72 உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைந்ததையடுத்து நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் திமுக எம்.பி திருச்சி சிவா காதல் பாட்டு பாடி அசத்தினார்.
மாநிலங்களைவை உறுப்பினர்கள் தேர்வு
மாநிலங்களவையில் உறுப்பினர்களின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும், மாநிலங்களவை எம்பிகளை சட்ட மன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பார்கள், அந்த வகையில் தமிழகத்தில் பொறுத்த வரை 34 சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கலாம், இதற்கான தேர்தல் நடைபெறுவது அரிதாகும், மாநிலங்களவை உறுப்பினர்கள் பெரும்பாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மேலும் மாநிலங்களவையில் அலங்கரிக்கும் வகையில், திரைத்துரையை சேர்ந்தவர்கள், கிரிக்கெட் வீரர்கள், உள்ளிட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், அந்த வகையில் தற்போது கூட பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

72 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஓய்வு
இந்தநிலையில் மாநிலங்களவையில் கடந்த 6 வருடங்களாக பணியாற்றிய 72 உறுப்பினர்களுக்கான பதவி காலம் முடிவடைந்துள்ளது, அவர்களுக்கு மாநிலங்களவையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணை தலைவருமான வெங்கையா நாயுடு பிரிவு உபச்சார விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார், இதில் ஓய்வு பெற உள்ள 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு கட்சிகள் சார்பாக பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்தவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பாட்டு பாடி அசத்திய திருச்சி சிவா
இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களை உறுப்பினர்களான டோலாசென் வந்தனா சவான் உள்ளிட்ட உறுப்பினர்கள் பாட்டு பாடி அசத்தினர், இதே போல திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவாவும், பழைய தமிழ் திரைப்படமான கொடி மலர் படத்தில் வரும் காதல் பாடலான மெளனமே பார்வையால் என்ற பாடலை பாடி அசத்தினார். இந்த பாடலை கேட்டு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்பிகள் கை தட்டி பாராட்டினார். அவரது பாடலை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
