திமுக எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூறுகையில், “பீகாரில்  நிதிஷ்குமார் மிகுந்த செல்வாக்குடன் இருந்தார். அங்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், ராஷ்ட்ரிய ஜனதாளத்தைவிட குறைவான இடங்களையே  நிதிஷ் பெற்றுள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அவர்கள் பின்னுக்கு தள்ளப்படுவார்கள் என்பதற்கு நிதிஷ்குமாரே உதாரணம். பாஜகவைப் பொறுத்தவரை அவர்கள் செய்யும் அரசியல் இது. தமிழகத்தில் பாஜகவோடு கூட்டணி சேரும் கட்சிக்கும் இதுதான் நிலை.


பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், அந்த வெற்றி நியாயமான வெற்றிதானா என்பது கேள்விக்குரியாதாகி உள்ளது. தமிழகத்தில் வேலை சுமந்து கொண்டு பாஜகவினர் சாலையில் நடந்து கொண்டு இருக்கிறார்கள். திராவிட இயக்கங்களோ முருகன் கோயில்களுக்குள் சென்று சுவாமிக்கு பூஜை செய்ய உரிமை வேண்டும் என போராடுகிறது. வேல் யாத்திரை என்பது முருகன் மீதுள்ள பக்தி கிடையாது. இது ஓர் அரசியல் விளையாட்டு” என டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.


 ‘பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அவர்கள் பின்னுக்கு தள்ளப்படுவார்கள் என்பதற்கு நிதிஷ்குமாரே உதாரணம்’ என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருப்பதன் மூலம் அதிமுகவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது தெரிகிறது. ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் அதிமுகவைவிட பாஜக அதிக தொகுதிகளை வெல்லும் என டி.கே.எஸ். இளங்கோவன் சொல்ல வருகிறாரா என்று கேள்வியும் எழுந்துள்ளது.