சென்னை சி.ஐ.டி. காலணியில் உள்ள திமுக எம்.பி. கனிமொழி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 
சென்னை சிஐடி காலனியில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. வீட்டுக்கு தினமும் ஒரு ஏட்டு தலைமையில் 4 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கனிமொழி வீட்டுக்கு வழங்கப்பட்டுவந்த போலீஸ் பாதுகாப்பை விலக்கிக்கொண்டதாக தகவல் வெளியானது. சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் காவலர்கள் மீது புகார் கூறி தமிழக டிஜிபியிடம் கனிமொழி புகார் அளித்த நிலையில், இந்தத் தகவல் வெளியானதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


கொரோனா தடுப்பு பணிக்கு காவலர்கள் தேவை உள்ளதாலும், கனிமொழிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதாலும் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கனிமொழி வீட்டுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக எம்பி கனிமொழி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் முழு ஊரடங்குக்கு மக்கள் பெரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.
கனிமொழி வீட்டுக்கு பாதுகாப்பு விலக்கப்பட்டதாக நேற்று பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஒரே நாளில் மீண்டும் உத்தரவு மாறியுள்ளது.