dmk MP kanimozhi criticises admk Ministers

இப்படிப்பட்ட அமைச்சர்களை எல்லாம் வைத்துக்கொண்டு ஜெயலலிதா எப்படித் தான் ஆட்சி நடத்தினாரோ என்று நினைப்பதற்கே பிரமிப்பாக இருக்கிறது என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியிருக்கிறார்.

திருப்பூர் டவுன்ஹாலில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தி.மு.க எம்.பி அதிமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து கலகலப்பாக உரையாற்றினார்.

அதில், இன்று தமிழகம் அதளபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. டெல்லிக்கு அடிமை சாசணம் எழுதிகொடுத்துவிட்டு, அண்ணாவின் கொள்கையை அடகு வைத்துவிட்டு, மக்களைப் பற்றி துளியும் கவலைகொள்ளாத ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள. அவர்களின் தலைவிக்கே துரோகம் செய்துவிட்டு, மக்களுக்கு மட்டும் எப்படி உண்மையாக இருப்பார்கள்?

ஒரு அமைச்சர் வைகையாற்றில் தெர்மாகோலை விடுகிறார். இன்னொரு அமைச்சர் சாயக் கழிவுக்கும், சோப்பு நுரைக்கும் வித்தியாசம் தெரியாமல் உளறுகிறார். இப்படிப்பட்டவர்களை வைத்துக்கொண்டு ஜெயலலிதா எப்படித் தான் ஆட்சி நடத்தினார் என நினைப்பதற்கே மிக பிரமிப்பாக இருக்கிறது. ஜெயலலிதாவின்மீது மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், பல விஷயங்களில் தமிழகத்தின் உரிமையை அவர் விட்டுக் கொடுத்ததேயில்லை.

ஆனால் இன்றைக்கு அவரின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துபவர்கள், ஆனால், தமிழகத்தின் உரிமைகளையும் தாரைவார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். திராவிடம் பற்றி தெரியாதவர்களின் கையில் இன்று ஆட்சி இருக்கிறது. இந்த விஷ விருட்சங்கள் பரவி, திராவிட மண்ணின் சொந்தகாரர்களுக்கு இடம் இல்லாத நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது. 
எனவே, தளபதி ஸ்டாலினின் தலைமையிலான ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தை நம்மால் காப்பாற்ற முடியும்' என பேசினார்.