நான் அதிருப்தியிலும் இல்லை, பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை என அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நிழலாகவும், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளராகவும் இருந்த எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் ஐக்கியமாவர் என்று கு.க.செல்வமே நம்பியிருக்கமாட்டார். தற்போது எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக சட்டப்பேரவையில் பாஜகவின் குரலாக கு.க.செல்வம் செயல்பட தயாராகி வருகிறார். இது ஸ்டாலினுக்கு மட்டும் இல்லை திமுகவிற்கும் மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து ஸ்டாலின் மீண்டும் வருவதற்குள் அடுத்தடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்த பாஜக மேலிடம் தயாராகி வருகிறது.

கு.க.செல்வம் பாஜகவுடன் இணைவதற்கு முன்பிருந்தே வட மாவட்ட எம்.பி. ஜெகத்ரட்சகன் பாஜக மேலிடத்துடன் தொடர்பில் இருக்கிறார். வட மாவட்டத்தில் திமுகவின் கஜானாவாக பார்க்கப்படுபவர் இந்த எம்பி. இதனாலேயே அடுத்தடுத்து அமலாக்கத்துறையால் பல்வேறு பிரச்சனைகளை இந்த எம்பி சந்தித்து வருகிறார். அண்மையில் கூட நம் அண்டை நாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தொடர்பான சர்ச்சையில் இந்த எம்.பி. சிக்கினார். இதனால், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பாஜகவில் இணைய உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள அவர் நான் அதிருப்தியிலும் இல்லை பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை எனக் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் தேவையின்றி இப்படி வதந்தி பரப்புவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது எனவும் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.