தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 9000ஐ கடந்துவிட்டது. இன்று 509 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 9227ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுவதால் அதிகமான தொற்று பாதிப்பு கண்டறியப்படுகிறது. பாதிப்பு அதிகரித்தாலும் இறப்பு விகிதம் 1%க்கும் குறைவாக உள்ளதுடன், அதிகமானோர் குணமடைந்துவருகின்றனர்.

தமிழ்நாடு அரசு, கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. ஆனால் தொடர்ச்சியாக தமிழக அரசின் மீது பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன. 

அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், திமுகவின் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ், மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் மனுக்களை தலைமை செயலாளர் சண்முகத்திடம் திமுக எம்பிக்கள் வழங்கினர். திமுக எம்பிக்களான தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் இந்த மனுக்களை தலைமை செயலாளரை சந்தித்து வழங்கினர். 

இந்த மனுக்களை கொடுத்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், இந்த இக்கட்டான சூழலில் திமுக ஆற்றிவரும் நிவாரண பணிகளை பார்த்து தலைமை செயலாளருக்கு பொறாமை. நாங்கள் மனு கொடுக்கும்போது, எம்பி-க்களான எங்களை கொஞ்சம் கூட மதிக்காமல், டிவியில் சத்தத்தை அலறவைத்துக்கொண்டு நாங்கள் பேசியதை கவனித்தார். அதுமட்டுமல்லாமல், உங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை என்று கொச்சைப்படுத்தினார். அவரது இந்த கூற்றை கேட்டு நாங்கள் அதிர்ந்தே போனோம் என்று தயாநிதி மாறன் பகிரங்மாக குற்றம்சாட்டியுள்ளார்.