டெல்லியில் இருந்து ஊட்டிக்கு திரும்பிய திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து பேருந்து, கார், விமானம், ரயில் போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் நடந்த நாடாளுமன்ற கூட்ட தொடர் முடியும் போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஆ.ராசா தமிழகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.  பின்னர், 5 கட்ட ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீடித்தாலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. 

இதனால், பேருந்து, ரயில், உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை விமானம் மூலம் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கோவை வந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் காரில் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஹில்பங்க் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். 

இதனையடுத்து, ஊட்டியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்திற்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆ.ராசாவை தெர்மல் மீட்டரை வைத்து சோதனை செய்தனர். பின்னர், ஆ.ராசா 7  நாள் தன்னைத்தானே தனிமை படுத்திக்கொள்ளமாறு அறிவுறுத்தினர். மேலும், அவரது வீட்டின் முன்பு தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கரையும் ஒட்டி சென்றனர்.