மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அவருக்கு காலம் தாழ்த்தாமல் வழிகாட்ட வேண்டும் என திமுக உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர். பாலு அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள், மருத்துவக் கல்வி பெற தடையாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருவதை அறிவீர்கள். நீட்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதற்கு வியப்பளிக்கும் வகையில் ஆளுநர் பதில் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ஏற்கனவே 40 நாட்கள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத அவர், அதுகுறித்து முடிவெடுக்க மேலும் மூன்றிலிருந்து நான்கு வாரகால அவகாசம் தேவை எனக் குறிப்பிட்டிருந்தார்.


தற்போது மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு சேர்க்கைகள் தொடங்கிவிட்டன. எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் இன்னமும் ஆளுநர் கால தாமதம் செய்வது மருத்துவக் கல்வியைக் கற்க விரும்பும் அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும். இந்தக் கல்வியாண்டில் அந்த மசோதாவின் நோக்கம் பயனற்றதாகிவிடும். அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை இந்த ஆண்டிலேயே நிறைவேற்றும்வண்ணம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி தமிழக ஆளுநருக்கு உள்துறை அமைச்சர் வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என அந்தக் கடிதத்தில் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.