Asianet News TamilAsianet News Tamil

Udhayanidhi Stalin : "தயவு செஞ்சு இதை பண்ணாதீங்க..." திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்த உதயநிதி!!

கொரோனா,கனமழை என தொடர் பாதிப்புகளிலிருந்து மக்கள் மீண்டு வரும் சூழலில் என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் உதவும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, அவர்கள் முகம் சுழிக்கும் வகையில் இருக்கவே கூடாது என திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்  உதயநிதி ஸ்டாலின்.

 

Dmk mla udhayanidhi stalin latest press release about birthday celebration
Author
Tamilnadu, First Published Nov 26, 2021, 11:35 AM IST

நாளை பிறந்தநாள் கொண்டாட இருக்கிறார் நடிகரும்,தி.மு.க இளைஞரணி செயலாளரும்,சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின். இதனையொட்டி, அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ‘வடகிழக்குப் பருவமழை பாதிப்பை நேரில் ஆய்வு செய்வதிலும், மக்களை சந்தித்து குறைகளை கேட்பதிலும், அதிகாரிகளுக்கு உடனுக்குடன் ஆலோசனை கூறுவதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதிலும் முதலமைச்சர் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் செயல்பட்டு வருவதை கண்டு நாடே பாராட்டுகிறது.முதலமைச்சர் அவர்களின் வழியில் அமைச்சர் பெருமக்களும், மாவட்ட கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், இளைஞரணி தம்பிமார்களும் களப்பணியாற்றி வருவதே அறிவேன்.

Dmk mla udhayanidhi stalin latest press release about birthday celebration

2015ஆம் ஆண்டை விட அதிக மழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததற்கு உங்களின் இந்த களப்பணியும் ஒரு முக்கியமான காரணம். அந்த வகையில் நான் எனது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதியிலும் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவி வருகிறேன், இந்த சூழலில் எனது பிறந்த நாளையொட்டி என்னை வாழ்த்தவும் பிறந்த நாளை மையமாக வைத்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழக மூத்த முன்னோடிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கவும் நீங்கள் தயாராகி வருவதை அறிவேன். 

கொரோனா பெருந்தொற்று, கனமழை என தொடர் பாதிப்புகளிலிருந்து கழக அரசின் உதவியுடன் மக்கள் மீண்டு வரும் சூழலில் என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் உதவும் வகையில் இருக்க வேண்டுமே தவிர அவர்கள் முகம் சுழிக்கும் வகையில் இருக்கவே கூடாது. எனவே பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, பிளக்ஸ் பேனர்கள் வைப்பது போன்ற ஆடம்பரங்களில் அறவே தவிர்க்க வேண்டும். இது போன்ற ஆடம்பர ஏற்பாடுகளுக்கு ஆகும் கூடுதல் செலவை நலத்திட்ட உதவிகளை பயன்படுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Dmk mla udhayanidhi stalin latest press release about birthday celebration

 இப்படி மக்களுக்கு பயனுள்ள வகையில் எனது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் அமையுமானால் அதைவிட மகிழ்ச்சி தருவது எனக்கு வேறு ஒன்றும் இருக்க முடியாது.வடகிழக்குப் பருவ மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதிலும் மீட்பு நடவடிக்கைகளில் பாதிப்புகளை சரி செய்வதிலும் கழக உடன்பிறப்புகள் தொடர்ந்து களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எனது பிறந்தநாளில் என்னை வாழ்த்தும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி’ என்று திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் எம்,எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios