‘உதயநிதி ஸ்டாலின் பரப்புரையின்போது தனது மாண்பை மீறி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு இனி சாவுமணி எனத் தகாத சொல்லால் பேசுகிறார்’ என்று குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்க ளை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ‘கோவை மாவட்ட மக்களை நம்பவில்லை. கடந்த முறை நான் பிரசாரத்துக்கு இங்கு வந்தபோது வாக்களித்து வெற்றி பெற செய்வோம் என சொன்னீர்கள்? செஞ்சீங்களா ? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்துள்ளார். 

அதிமுக ஆட்சியில் வீட்டில் மக்களை முடக்கியது தான் சாதனை. ஆனால் உயிரிழப்புகளை தடுக்க 10 கோடி தடுப்பூசிகளை போட்டது திமுக அரசு தான். அதிமுக ஆட்சியில் ஒரு கோடி தடுப்பூசி தான் போட்டார்கள். இது போன்று மக்களுக்காக செயல்படுவதால், இந்தியாவின் நம்பர் ஒன் முதல் -அமைச்சர் ஸ்டாலின் தான் என அனைவரும் கூறுகிறார்கள்.

அதிமுக ஆட்சி முடிந்த போது ரூ.6 லட்சம் கோடி கடனை வைத்து சென்றனர். ஆனாலும் தி.மு.க ஆட்சி அமைந்த உடன் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. நிதிநிலை சரி செய்யப்பட்டு விரைவில் பெண்களுக்கு மாதாமாதம் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.

ஊழல்மணிக்கு சாவுமணி அடிப்பது நிச்சயம். ஏற்கனவே அவரது ரூ.110 கோடி முடக்கப்பட்டு உள்ளது. வெள்ளலூர் குப்பைக்கிடங்கு இடம் மாற்றப்படுவதுடன் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும். இன்னும் 27 அமாவாசை தான் திமுக ஆட்சி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனால் தமிழகத்தில் உள்ள 2 அமாவாசைகள் யார்? என்பது உங்களுக்கு தெரியும். ஒன்று எடப்பாடி பழனிசாமி, மற்றொருவர் ஓ.பன்னீர்செல்வம். 

இருவரையும் அனுப்பிவிட்டீர்கள், ஆனால் ஓட ஓட விரட்ட வேண்டும் என்பதற்காக தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று பேசினார். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும் என ஜெயக்குமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது பூத் கைப்பற்றுதல், கலவரத்தை உண்டுபண்ணுவதற்காக திமுகவினர் கொடூர ரவுடிகளை இறக்கி இருக்கின்றனர். உடனடியாக அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் பரப்புரையின்போது தனது மாண்பை மீறி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு இனி சாவுமணி எனத் தகாத சொல்லால் பேசுகிறார். அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.