கரூர் மாவட்ட ஆட்சியர் படித்த முட்டாளாக இருக்கிறார். அவர் வெளியில் எங்கும் நடமாட முடியாது என திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பகிங்க மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அன்பழகனை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், திமுக சார்பில் பொதுமக்களின் உதவி எண் என்ற முயற்சியின் மூலம் தமிழக மக்களின் கோரிக்கையை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்து வருகிறது திமுக. பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளையும் எங்கள் சக்திக்கு உட்பட்டு முடிந்தவரை நிறைவேற்ற இரவும், பகலும் அயராது உழைத்து வரும் நிலையில், அவர்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிறோம்.

 

அவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, ’’கொரொனா தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கரூர் சட்டமன்ற உறுப்பினர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளும்போது, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரான என்னையும், குளித்தலை சட்டமன்ற உறுப்பினரான ராமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோரை அழைக்கவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை கேட்டால், மாவட்ட ஆட்சி தலைவர் என்ற பக்குவம் இல்லாமல் அவர் இருக்கின்றார்.

 

இந்த நிலை தொடர்ந்தால் மாவட்ட ஆட்சியர் எங்கும் வெளியில் போக முடியாது. படித்த முட்டாளாக இருக்கிறார். மாவட்ட ஆட்சித் தலைவர் என்கிற பக்குவமே இல்லாமல் இருக்கிறார். இதுதான் கடைசியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் இந்த நிலையை தொடர்ந்தால் வெளியில் எங்கும் போக முடியாது. அவர் காவல்துறையை வைத்து அடக்குமுறையை கையாளட்டும். அரசு இயந்திரத்தை பயன்படுத்தட்டும். 2 லட்சம் மக்கள் பிரதிநியாக இங்கே வந்திருக்கிறோம். ஆகையால் மாவட்ட ஆட்சியருக்கு இதனை கட்சி எச்சரிக்கையாக சொல்கிறேன்’’ எனப் பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.