திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி எம்.எல்.ஏ.வானர் கு.க.செல்வம். தற்போது திமுக தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான கு.க.செல்வம் மக்களவை தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக செயலாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. 

இதனையடுத்து உடனே கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்தவர்கள், ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மருத்துவர்கள் ஆலோசனையின் படி ஓரிரு நாளில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சை பெற்று வரும் எம்.எல்.ஏ கு.க.செல்வம் அவர்களை திமுக பிரமுகர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.