சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவான கு.க.செல்வம் பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாயின. இதனையடுத்து டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை  சில தினங்களுக்கு முன்பு நேரில் சந்தித்து பேசினார் கு.க.செல்வம். ஆனால், பாஜகவில் சேரவில்லை என்றும் அதிரடியாக அறிவித்து கட்சித் தலைமையை விமர்சித்தார். இதனையடுத்து திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் கு.க. செல்வம். மேலும் அவர் வகித்து  வந்த தலைமை நிலைய செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்தும் திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் நீக்கினார். மேலும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் நிரந்தரமாக நீக்கக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் திமுக தெரிவித்தது.


மு.க. ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு பிறகு சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்துக்கு கு.க. செல்வம் சென்றார். இந்நிலையில் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கு.க. செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், “பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்தது குறித்து   நான் பதிலளிக்கும் முன்பே கட்சியிலிருந்து நீக்கியிருப்பது இயற்கை நீதிக்கு விரோதமானது. எனவே, தங்களின் தற்காலிக நீக்கத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று கு.க. செல்வம் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.