சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வத்திற்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் இன்று மாலை ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி யாருக்குக் கிடைக்கும் என திமுகவில் விவாதங்கள் தொடங்கியது. அதன் கட்சி கட்டமைப்பில் மாவட்டச் செயலாளர் பதவிதான் வலைமை மிக்கது. எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என்கிற பதவிகளைவிட வலிமையானது மாவட்ட செயலாளர் பதவி. அந்த வகையில், மாவட்ட செயலாளர் பதவியைக் கைப்பற்ற பலரும் குறி வைத்து வந்தனர். 

குறிப்பாக, ஆயிரம் விளக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வும் தலைமை நிலைய செயலாளருமான கு.க.செல்வம், அண்ணா நகர் எம்.எல்.ஏ. மோகன் உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக சீனியர்களை ஓரம் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத சிற்றரசுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சிற்றரசு மாவட்டச் செயலாளர் ஆனதற்கு உதயநிதி தான் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியானது. இதனால், தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த கு.க.செல்வம் ஏமாற்றம் அடைந்தார். இதனால், கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இன்று மாலை 4.30 மணிக்கு தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் கு.க.செல்வம், 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.