சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் இன்று பாஜகவில் இணைய உள்ள செய்தியை அறிந்த மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து,  திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி யாருக்குக் கிடைக்கும் என திமுகவில் விவாதங்கள் தொடங்கியது. குறிப்பாக கு.க.செல்வத்திற்கு பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறிமுகம் இல்லாத இளைஞரணி தலைவர் நே.சிற்றரசுக்கு பதவி வழங்கப்பட்டது.

இதனால், கு.க.செல்வம் கடந்த சில நாட்களாக அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகின. இதனையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.