திருப்போரூர் செங்காடு கிராமத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் துப்பாக்கிச் சூடு நடத்திய போது பதிவான செல்போன் வீடியோ காட்சிகளை கைப்பற்ற போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அமமுக பிரமுகர் குமார் – திமுக எம்எல்ஏ இதயவர்மன் இடையிலான நிலப்பிரச்சனையால் கடந்த 15 நாட்களாகவே செங்காடு கிராமம் பதற்றத்தில் இருந்துள்ளது. அவ்வப்போது திமுக எம்எல்ஏ தரப்பும் குமார் தரப்பும் மோதிக் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து பலமுறை செங்காடு கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்தும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2 தரப்புமே விட்டுக் கொடுக்க தயாராக இல்லாததால் பிரச்சனை நீரு பூத்த நெருப்பாகவே இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 10ந் தேதி திமுக எம்எல்ஏ ஆதரவாளர்கள் குமாரின் நிலத்திற்குள் சென்று கால்வாய் அமைத்துள்ளனர்.

இதனை குமாரின் ஆதரவாளர் ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து மோதல் ஏற்படும் சூழல் இருந்த நிலையில் குமார் திருப்போரூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். விரைந்து வந்த போலீசார் இருதரப்பினரையும் அங்கிருந்து களைந்து போக வைத்தனர். இதற்கிடையே மறுநாள் மீண்டும் ரவுடி பட்டாளத்துடன் செங்காடு கிராமத்திற்கு குமார் வந்த நிலையில் எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் அவரது ஆதவராளர்களுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது தான் இதயவர்மன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதயவர்மன் காரில் இருந்து துப்பாக்கியை எடுத்த போது குமார் ஆதரவாளர்களில் சிலர் செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்து தான் இதயவர்மனின் தந்தை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் பிறகு குமாரை நோக்கி சுட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே எம்எல்ஏ துப்பாக்கியுடன் இருப்பது போன்ற காட்சிகளை அமமுக பிரமுகர் குமாரின் ஆதரவாளர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளதாகவும் அவர் தற்போது தலைமறைவாக உள்ளதகாவும் கூறுகிறார்கள். அவரை பிடித்தால் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மீதான வழக்கை வலுப்படுத்திவிடலாம் என்று போலீஸ் படை தீவிரமாக தேடி வருவதாக சொல்கிறார்கள்.