திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைதான திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருக்கும், குமார் என்பவருக்கும் கடந்த மாதம் 11-ம் தேதி நிலத்தகராறில் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் சீனிவாசன் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்டோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், அவரது வீட்டில் பரிசோதனை செய்த போது குவியல் குவியலாக துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டது. 

இதனையடுத்து இதயவர்மன் ஜாமீன் கோரி செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனிடையே இதயவர்மனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிபதிகள் அனுமதி அளித்ததன் பேரில், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, மீண்டும் ஜாமீன் கேட்டு இதயவர்மன் உள்பட 11 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, இதயவர்மன் துப்பாக்கி தோட்டாக்கள் தயாரிக்கும் ஆலை நடத்தி வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்பட 11 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். இதயவர்மன் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு ரூ.3 லட்சத்தை நன்கொடையாக அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். வேலூர் காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட இதயவர்மனுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இதயவர்மனுடன் கைதான 10 பேர் திருப்போரூர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.