dmk mlas do not need a pay rise

எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு தேவையா? என்றும், போக்குவரத்து ஊழியர்களுக்கே ஊதியத்தை வழங்க கடன் பெற வேண்டிய நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு தேவையில்லை என்றும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதிய உயர்வு குறித்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறித்து இன்று சட்டப்பேரவையில் பேசினார். 

அப்போது ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு தேவையா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், அது குறித்து சபாநாயகரிடம் கடிதம் வழங்குவோம் என்று கூறினார். திமுக எம்.எல்ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு தேவையில்லை என்றும், அதனை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் கூறினார். ஊதிய உயர்வு தேவையில்லை என கையெழுத்து போட்டுள்ளோம் என்றும் ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வசதியாக இல்லை. ஆற்காடு அதிமுக எம்.எல்.ஏ. சித்ரா இன்னும் தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார்.

மேலும் பேசிய ஓ.பி.எஸ்., கடந்த 6 மாதகாலமாக ஊதிய உயர்வு பற்றி பேசாத ஸ்டாலின், தற்போது பேசுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது இடைமறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நமது எம்.எல்.ஏக்களை நாமே காப்பாற்றாவிட்டால், வேறு யார் காப்பாற்றுவது? என்று கேள்வி எழுப்பினார்.