திருப்போரூர் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மனிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி, மூன்று தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.‘’செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாண்டவமூர்த்தி மற்றும் அவரது சகோதர் குமார் கோயில் நிலத்தில் சாலை அமைக்க 50 பேருடன் வந்தனர். இதனை திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மணின் தந்தை லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய போது, இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நடந்தது.

இந்த மோதலில் அனுமதி பெற்ற நாட்டு துப்பாக்கி கொண்டு எதிர் தரப்பினரின் காரை நோக்கி லட்சுமிபதி சுட்டதாகவும் அதில் ஒரு குண்டு காரின் மீது மற்றொரு குண்டு ஸ்ரீநிவாசன் என்பவரின் முதுகு பகுதியில்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கலவரம் மூண்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து எஸ்.பி கண்ணன் கூறுகையில், ’’இந்த மோதல் தொடர்பாக 6 டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மனிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி, மூன்று தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’என அவர் தெரிவித்தார்.