கல்வராயன் கோடை விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி கௌதமசிகாமணி, எம்.எல்.ஏ உதயசூரியன் விழாவை புறக்கணித்து பாதியில் வெளியேறினர். அப்போது அங்கிருந்த அதிமுகவினர் விசிலடித்து ஆராவாரம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே கல்வராயன் மலையில் கோடை விழாவை வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று தொடங்கி வைத்தார். அந்த விழாவில் கள்ளக்குறிச்சி தொகுதி எம்பி கவுதமசிகாமணி, மற்றும் திமுக எம்.எல்.ஏ உதயசூரியன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்எல்ஏ உதயசூரியன், கல்வராயன் மலைப் பகுதியில் பல ஆண்டுகளாக சாலைகள் போடப்படாமல், சாலை அமைக்கும் பணி, கிணறு வெட்டும் பணிகள் வனத் துறையினர் தலையீட்டால் முடிக்க முடியாமல் உள்ளன. வனத் துறை சட்டம் தெரியாமல் பழங்குடியின மக்கள் தவறு செய்தால் அவர்களை தாக்குவதை விட்டுவிட்டு சட்டம் தொடர்பான பயிற்சியினை அளிக்க வேண்டும் என சொன்ன அவர், கடந்த கோடை விழாவில் சொன்னதைக்கூட நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்து பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இந்தக் குறைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஒருமுறை கூட என்னிடம் வந்து  பேசியதில்லை. அவர் தொகுதி மக்களிடம் நல்ல பெயர் எடுக்க இப்படி பேசுவதில் வல்லவர் என்றார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், வனத் துறை அனுமதியோடு இங்கு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்வராயன் மலையில் விதிகளை மீறுவோரிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நீங்கள் கூறினால் அங்கு வனத் துறை, காவல் துறையின் தலையீடு இருக்காது என்று தெரிவித்தார்.அப்போது அவரின் பேச்சால் கடுப்பான எம்.எல்.ஏ, நீங்க  செய்வது அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவங்களுக்கு அனைத்தும் தெரியும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், எம்.பி.  கௌதமசிகாமணியோடு விழாவை புறக்கணித்துவிட்டு வெளியேறினார். அப்போது அங்கிருந்த அதிமுகவினர் பயங்கர கரகோஷத்தோடு, விசிலடித்து ஆராவாரம் செய்தனர்.