வரும் 28ந் தேதி தி.மு.க பொதுக்குழு சென்னையில் கூட உள்ள நிலையில் அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களும், முக்கிய நிர்வாகிகளும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடத்த பொதுக்குழு கூட உள்ளதாக ஸ்டாலின் அறிவிப்பதற்கு முன்பு இருந்தே பொதுக்குழு உறுப்பினர்கள் மீதான கண்காணிப்பு தீவிரமானது.

மேலும் அழகிரிக்கு நெருக்கமாக இருந்து தற்போது ஸ்டாலினுடன் இருக்கும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரின் நடவடிக்கைகளும் அன்றாடம் நோட்டமிடப்படுகிறது.

 தற்போதைய சூழலில் தி.மு.கவின் ஒரு கிளைச் செயலாளர் கூட அழகிரிக்கு ஆதரவாக இல்லை. ஆனால் பொதுக்குழு நெருங்க நெருங்க தி.மு.கவில் தற்போது பொறுப்பில் உள்ள ஒவ்வொருவரின் மார்க்கெட் வேல்யூவும் ஏறிக் கொண்டே செல்கிறது. காரணம், மு.க.அழகிரி தனது பலத்தை காட்ட சென்னையில் மிக பிரமாண்ட பேரணிக்கு தயாராகி வருகிறார். எப்பாடு பட்டேனும் இந்த பேரணிக்கு தி.மு.க தொண்டர்களை ஆயிரக்கணக்கில் திரட்ட அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அழகிரி அமைதியானதால் கட்சி நிர்வாகிகளுடனான அவரது தொடர்பு முறிந்து போனது. தற்போது அதனை புதுப்பிக்க பணம் எனும் ஆயுதத்தை இறுதியில் அழகிரி கையில் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. பொதுக்குழு உறுப்பினர்களில் கணிசமானவர்களை பணத்தாசை மூலம் தனது பக்கம் இழுத்துவிடலாம் என்று அழகிரி கடந்த வாரமே முயற்சி மேற்கொண்டார்.

ஆனால் இதனை மோப்பம் பிடித்த ஸ்டாலின் தரப்பு மாநிலம் முழுவதும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை நேரடியாகவே தொடர்பு கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகிறது.

மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் அழகிரி பக்கம் சென்றால் கூட அந்த மாவட்டத்தின் செயலாளர் பதவியில் நீடிக்க முடியாது என்கிற அளவில் மேலிடத்தில் இருந்து நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றனர். மேலும் பொதுக்குழு உறுப்பினர்களை தீவிரமாக கண்காணிக்கவும் தி.மு.க மேலிடம் உத்தரவிட்டுள்ளது. 

இதனால் தலைமையின் அழைப்பு இல்லாமல் எந்த மாவட்டச் செயலாளரும் சென்னைக்கு வரக்கூடாது என்றும் தலைமையின் அனுமதி இல்லாமல் பொதுக்குழு முடியும் வரை எந்த மாவட்டச் செயலாளரும் வெளியூர் செல்லக்கூடாது என்றும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அழகிரியுடன் நெருக்கமாக இருந்து தற்போது ஸ்டாலினுடன் இருக்கும் மாவட்டச் செயலாளர்களை தி.மு.க மேலிடம் தனிக்கவனம் செலுத்தி கண்காணிக்கிறது. எந்த சூழ்நிலையிலும் அழகிரி தரப்பு அவர்களை தொடர்பு கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்தவும் படாதபாடு படுகின்றனர். ஏனென்றால் தான் தலைவராக தேர்வு செய்யும் பொதுக்குழு மிக அமைதியாக நடந்து முடிய வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் தற்போதைய லட்சியமாக உள்ளது.