ஓசி பிரியாணி பிரியாணி கேட்டு பஞ்சிங், பியூட்டி பார்லரில் பெண்ணுக்கு உதை, செல்போன் கடையில் துவம்சம், வழிவிடாத அரசு பேருந்து ஓட்டுநர் மீது சராமரி தாக்குதல் என தொடர்ந்து வந்த திமுக ரவுடிகளின் அட்டூழியத்தில் தற்போது ஏழைப்பெண்கள் இருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

புதுக்கோட்டை, மாவட்டம் திருமயம், பைரவர் கோவில் முன் பெட்டிக் கடையை நடத்தி வருகிறார் கவுரி. திமுக ஒன்றிய செயலாளர் சரவணனிடம் இவர் சிறிய அளவு பணம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை கேட்டு சில ரவுடிகளையும் உடன் அழைத்து வந்துள்ளார் சரவணன். அப்போது கவுரியையும் அவரது சகோதரி வாசுகியையும் சரவணன் கோஷ்டி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், சரவணன் நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பலுடன் ஒரு பெட்டிக்கடைக்கு முன் வந்து சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். 

மூன்று பெண்கள் மட்டுமே இருந்த அந்தக் கடைக்கு முன் நின்று கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருந்த திமுக ரவுடிகள் பெட்டிக் கடையில் இருந்த பாட்டில்களை கீழே போட்டு உடைத்து அராஜாகத்தில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க முயன்ற வாசுகி, கவுரி ஆகியோரை பெண்களென்றும் பாராமல் அடித்து நொறுக்குகின்றனர். வலி தாங்க முடியாத அந்த ஏழைப்பெண்கள் அலறித்துடிக்கின்றனர். இந்த வீடியோ பார்ப்பவர்களை கலங்கடிக்கிறது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. எப்பேர்பட்ட ஆளாக இருந்தாலும் பெண்களை தாக்குவது பெரும் குற்றம் என திமுக ஒன்றிய செயலாளர் மீது கடுப்பாகி வருகின்றனர் பொதுமக்கள். 

ஒரு கட்சியில் இருக்கிறோம். இப்படி அராஜாகமாக நடந்துகொள்வது கெட்ட பெயரை ஏற்படுத்தும். நமது கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினுக்கும் தலைமைக்கும் களங்கத்தை ஏற்படுத்துமே என்கிற பயமே இல்லாமல்,  அராஜகத்தில் ஈடுபடுகிறோமே என்கிற எண்ணம் இப்படி தாக்குதலில் ஈடுபடுவோருக்கு இல்லை. இதெற்கெல்லாம் காரணம் கட்சித் தலைமை சம்பந்தப்பட்டவரை தட்டிக் கேட்பதே இல்லை. 

இதற்கு முன் நடந்த சில சம்பவங்களுக்கு பிறகும் திமுக ரவுடிகள் தங்களது அராஜாக போக்கை மாற்றிக் கொள்ளாததற்கு திமுக தலைமை நடவடிக்கை எடுக்காததே காரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சென்னையில் ஓசி பிரியாணி கேட்டு அடித்த சூடு அடங்குவதற்குள் பெரம்பலூரில் பெண்களை பியூட்டி பார்லரில் திமுக நிர்வாகி தாக்கியது, திருவண்ணாமலையில் செல்போன் கடையை அடித்து நொறுக்கியது, கருணாநிதி மறைவு சமயத்தில் தள்ளுவண்டிக்காரரை தாக்கி துவம்சம் செய்தது, வேலூரில் காருக்கு வழிவிடாத அரசு பேருந்து ஓட்டுநரை பெண்டு நிமித்தியது என திமுக ரவுடிகளின் அராஜகம் தொடர்ந்து வருகிறது. 

ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியுமா? அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? எனத் தெரியவில்லை. ஓசி பிரியாணி விவகாரம் எழுந்தபோது தாக்குதலுக்கு ஆளான பிரியாணி கடைக்காரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி வந்ததோடு சரி. அடுத்தடுத்த தாக்குதல் சம்பவங்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை. தேர்தல் நேரத்தில் இனியும் தமது கட்சியில் உள்ள ரவுடிகளை அடக்கி அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் எடுக்காவிட்டால், அதன் விளைவை திமுக தேர்தல் சமயங்களில் மொத்தமாக அறுவடை செய்யப்போவது உறுதி என்கிறார்கள் பொதுமக்கள்.