சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், சேலம் திமுகவில் மாவட்ட செயலாளர்களை மற்றி அக்கட்சி தலைமை மாற்றியுள்ளது.
திமுக தலைமைக் கழகம் சார்பில் அறிவிப்பில், மாவட்ட செயலாளர்கள் மாற்றம் பற்றி அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், “சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக, கழக தேர்தல் பணிக்குழு செயலாளராக பொறுப்பு வகித்து வந்த டி.எம்.செல்வகணபதி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சேலம் மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். சேலம் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக எஸ்.ஆர்.சிவலிங்கம் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
தி.மு.க. சட்டதிட்ட விதி 31-ன்படி, வீரபாண்டி ராஜா தலைமைக் கழகத்தால் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டக் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என திமுக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடு இருந்தவரை, சேலம் திமுக அவருடைய கையில் இருந்தது. அவர் மறைவுக்கு பிறகு அவருடைய மகன் வீரபாண்டி ராஜா நீண்ட இழுபறிக்கு பிறகுதான் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், அந்தப் பதவி அவருடைய போட்டியாளரான சிவலிங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்குழு என்ற டம்மி போஸ்டில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் வீரபாண்டி ராஜா டம்மி போஸ்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதுவும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.