dmk left assembly in gutka issue

குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் , டிஜிபி டி.கே.ஆர் , டிஜிபி ஜார்ஜ் ஆகியோர் பணம் பெற்றதற்கான வருமான வரித்துறை கடிதம் புயலை கிளப்பி உள்ளது. இது குறித்து இன்றைய சட்டசபையில் விவாதிக்க திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். 

குட்கா பான்பராக் போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விவகாரத்தில் குட்கா நிறுவன உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் விஜயபாஸ்கர் , டிஜிபி டி.கே.ராஜேந்திரன் , தீயணைப்புத்துறை டிஜிபி ஜார்ஜ் உள்ளிட்டோர் பணம் பெற்றதாக விபரங்கள் வெளியானது.

 ஊடகங்களில் வெளியான இந்த விவகாரத்தில் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் ராஜினாமா செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்த ஸ்டாலின் இது பற்றி சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எங்களிடம் ஆதாரம் உள்ளது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

ஆனால் சபாநாயகர் தனபால் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆதாரத்தை என்னிடம் கொடுங்கள் அதை பரிசீலித்த பின்னரே விவாதம் தேவை என்றால் அனுமதிப்பேன் என்று கூறினார். இதை ஏற்றுக்கொள்ளாத திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை வெளியேற்றுவேன் என சபாநாயகர் எச்சரித்தார். பின்னர் திமுஅகவினர் வெளிநடப்பு செய்தனர்.