ஈழ விடுதலை போராளி திலீபன் அவர்களின் 33-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது திருஉருவ படத்திற்கு  சென்னை அசோக் நகரில் உள்ள ‌விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர். 

எஸ்.பி பாலசுப்ரமணியம் தமிழ் மொழிக்கு பெயர் சூட்டியவர், மகுடம் சூட்டியவர், அவருடைய இறப்பு பேரிழப்பு. அவருக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.இந்த கோரோனா நேரத்திலும் வேளாண் தொடர்பான சட்டங்களை கொண்டு வந்து மோடி அரசு அதை அடாவடித்தனமாக நிறைவேற்றியிருக்கிறது. நாடாளுமன்ற விதிமுறை மீறலுக்கு மாறாக, நாடாளுமன்ற சட்டத்தை நசுக்கும் விதமாக வேளாண் மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு என்ற பெயரால் குரல் எழுப்ப வாய்ப்பளிக்காமல் மாநிலங்கள் அவையில் நிறைவேற்றி யிருக்கிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்களவை உறுப்பினர் 8 பேரை இடைநீக்கம் செய்து இருக்கிறார்கள். சொல்லப்போனால் குடியசுத் தலைவர் மோடி அரசை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். மோடி அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு எதிரான நடவடிக்கையை மோடி அரசு  கைவிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஈழத் தமிழர்களுக்காக போராடி உள்ளோம். அனைத்துக் கட்சியினரும் ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்போம். ஈழத் தமிழர்களின் சிக்கலை இந்திய இலங்கை அரசுக்கான முதன்மைத் துவமான பிரச்சனையாக மாற்றுவதற்குரிய ராஜதந்திர நடவடிக்கைகளை தமிழ் சமூகம் மேற்கொள்ள வேண்டும். வெறும் விமர்சனங்கள் தீர்வுக்கு பயன்படாது. 

தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். ஏற்கனவே உள்ள கட்டமைப்பு அடிப்படைகளைக் கொண்டு தேர்தலை எதிர் கொள்வோம். திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. அந்த கூட்டணியில் தொடர்வோம். எங்களிடத்தில் எந்த ஊசலாட்டமும் இல்லை, தடுமாற்றமும் இல்லை, குழப்பமும் இல்லை, திமுக தலைமையிலான கூட்டணி ஒற்றுமையோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். சாதியவாதிகள், மதவாத சக்திகள் தமிழகத்தில் தலை தூக்கி விட கூடாது.  நாட்டின் நலன், மக்களின் நலன். சனாதன சக்திகளில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் தேர்தல் உறவை அணுகுகிறோம். ஆகவே திமுக தலைமையிலான கூட்டணியில் தான் பிஜேபியை இங்கு கால் விடாமல் தடுக்க முடியும். வேளாண் மசோதா சட்டம் விவசாயிகள் அனைவருக்கும் எதிரான ஒரு சட்டம் என்றார்.