தமிழகத்தில் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்குஎண்ணிகை முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி பல இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தலில் 25 இடங்களில் திமுகவும் 22 இடங்களில் அதிமுகவும் முன்னிலை பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலருக்கான தேர்தலில் 56 இடங்களில் திமுகவும் 44 இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் இருப்பதாக தகவல் வந்துள்ளது.திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், இ.கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா இடத்தில் முன்னிலையில் இருக்கிறது.

தனித்து போட்டியிட்ட நாம் தமிழர், அமமுக ஆகியோரின் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இதனிடையே சில இடங்களில் வேட்பாளர்களின் வெற்றி அறிவிப்புகளும் வந்த வண்ணம் இருக்கிறது. மேலும் பல தபால் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாததால் 350 க்கும் மேற்பட்ட தபால் வாக்குகள் செல்லாதவை ஆகியுள்ளன.