திமுக பொதுக்குழு கூட்டம் கூட இருக்கும் நிலையில்  திமுகவினர் மத்தியில் அடுத்தடுத்து பதவி சண்டை களைகட்ட ஆரம்பித்திருக்கிறது.

திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 9ஆம் தேதி கூடுகிறது. அதற்குள் திமுகவில் காலியாக இருந்த பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் , பொருளாளர் பதவிக்கு டி.ஆர் பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் புதிய பூகம்பம் ஒன்று கட்சிக்குள் நிலவி வருவது உடன்பிறப்புகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் பொன்முடி.  கருணாநிதியின் நம்பிக்கை பாத்திரமாக விளங்கிய கே.என்.நேருவும், பொன்முடியும் ஒரே சமயத்தில் அமைச்சர்களாக பதவியேற்றனர். இருவரும் ஒரே சமயத்தில் கருணாநிதியின் அமைச்சரவையில் பணியாற்றியவர்கள். விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி குறுநிலமன்னர். திருச்சியில் கே.என் நேரு குறுநிலமன்னர். ஆக திமுகவை பொறுத்தவரை மாவட்டச் செயலாளர்கள் அந்தந்த மாவட்டத்தில் குறுநிலமன்னர்களாகவே இருக்கிறார்கள். இருந்தார்கள்.

இந்த சூழலில் கட்சி தரும் துணைப் பொதுச்செயாலளர் பதவி தனக்கு வேண்டாம், தனக்கு இணையாக வளர்ந்து வந்த கே.என் நேருவுக்கு மட்டும் கழக முதன்மை செயலாளர் பதவி எனக்கு என்ன பதவி என்று தலைவரிடம் கேள்வி கேட்டு வருகிறாராம் பொன்முடி. முதன்மை செயலாளர் பதவியை இரண்டாக்கி ஒன்று நேருவுக்கும் மற்றொன்று தனக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்திருக்கிறாராம்.இந்த கோரிக்கை ஸ்டாலினுக்கு கூடுதலான தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொன்முடியின் கோரிக்கை இத்துடன் முடியவில்லை இன்னொரு கோரிக்கையும் வைத்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து வன்னியர் சமுதயாத்தை சேர்ந்தவருக்கு ஒரு மாவட்ட பொறுப்பாளர் பதவியையும், இன்னொரு பகுதியில் தனது மகன் கௌதம சிகாமணியை மாவட்ட பொறுப்பாளராக ஆக்க வேண்டும்.இந்த இரண்டு கோரிக்கையும் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என போர் கொடி தூக்கியிருக்கிறார் பொன்முடி.

விழுப்புரம் மாவட்டம் இன்றைக்கும் என்றைக்கும் பொன்முடி கண் அசைவில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது.இவருக்கு எதிராக திமுகவில் இன்னொரு நபர் கொம்பு சீவ முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.அந்த அளவிற்கு மாவட்டத்தில் அசைக்க முடியாத மாவட்டச்செயலாளராக வலம் வருபவர் தான் பொன்முடி. தேர்தல் நேரத்தில் சீனியர்கள் மனவருத்தத்தில் இருக்க கூடாது என்பதற்காக மாநில பொறுப்பு கொடுத்து பொன்முடியை தலைமைக்கு அழைத்துச்செல்ல ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறாராம். எனக்கு மாநில பொறுப்பு கொடுத்தாலும் மாவட்ட பொறுப்பு என் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அந்த பொறுப்பு என் மகனுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் பொன்முடி. இதற்காக உதயநிதி மூலம் பொன்முடி மகன் காய்நகர்த்தி வருகிறாராம். 

 வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் பல பதவிகள் திமுகவில் புற்றீசலாய் புதிய பதவிகள் உதிக்கலாம்.அந்த பதவிகள் பல வாரிசுகளும் அதில் இடம்பெறலாம்.திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பொருளாளர் பதவி முடிவு செய்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் புதிய தலைவலிகள் ஸ்டாலினை தேடிவந்து கொண்டிருக்கிறது.