Asianet News Tamil

நாக்கை அறுத்துக்கொண்ட வனிதா... நடுநடுக்கிப் போன ஸ்டாலின்... சற்று நேரத்திற்கு முன்பு வெளியான பரபரப்பு அறிக்கை!

ஆனால் இப்படி உடல் உறுப்பை அறுத்துக் கொண்டு பெண் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்திய விவகாரம் திமுக தலைவரும், வருங்கால முதல்வருமான மு.க.ஸ்டாலின் செவிக்கு எட்டியது. 

DMK Leader MK Stalin Wish recovery to women who  cuts tongue
Author
Chennai, First Published May 4, 2021, 2:50 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது. 125 தொகுதிகளில் வென்றுள்ள திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. வரும் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல்வராக ஸ்டாலினும், 32 அமைச்சர்களும் பதவியேற்க இருப்பதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

​இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானால் நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்துவதாக  பரமக்குடி தாலுகா பொதுவக்குடியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா வேண்டியிருந்தார். அதன்படி நேற்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார். கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின்னர் அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாகவே தேர்தல் சமயங்களில் ஒரு குறிப்பிட்ட கட்சி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அந்த கட்சி வெற்றி பெற்றால் நேர்த்தி கடன் செலுத்துகிறேன் என்று சில பெண்கள் வேண்டுவது வழக்கம் தான். ஆனால் இப்படி உடல் உறுப்பை அறுத்துக் கொண்டு பெண் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்திய விவகாரம் திமுக தலைவரும், வருங்கால முதல்வருமான மு.க.ஸ்டாலின் செவிக்கு எட்டியது. 

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா என்கிற தி.மு.க. தொண்டர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் தன் நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்துவதாகக் கோயிலில் வேண்டிக்கொண்டதோடு அதை நிறைவேற்றியதாகவும் செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன்.தமிழக மக்கள் ஒரு துளி இரத்தம்கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம்.

நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகச் சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை பற்றிக் கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக் கொள்ளாதீர்கள். அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் இதைப் போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச் செய்திட கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது. வனிதா என்ற சகோதரி விரைவில் உடல்நலம் பெற்று இயல்பு வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios