உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது திமுகவின் குரல் அல்ல, எனது தனிப்பட்ட கருத்து என கே.என்.நேரு கூறியுள்ளார். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் காலி குடங்களுடன் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில், திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும். காங்கிரஸுக்கு எவ்வளவு நாளுக்கு திமுக பல்லாக்கு தூக்குவது.? காங்கிரஸ் கட்சியினர் ஆளாளுக்கு பேச்சுவார்கள் அதையெல்லாம் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? என பொங்கி எழுந்தார். இவரது அந்தப்பேச்சு அடங்கிய வீடியோ தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், காலையில் கூறி சர்ச்சை கருத்து தொடர்பாக கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலக வேண்டும் என நான் கூறவில்லை. திமுக தலைவருக்கு முழுமையாக கட்டுப்பட்டுவன் நான். உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்பது கலகத்தின் குரல் அல்ல. ஒரு மாவட்ட செயலாளராக எனது கருத்தை நான் கூறினேன். முடிவெடுக்கும் இடத்தில் நான் இல்லை. அனைத்து முடிவுகளையும் தலைவர் ஸ்டாலின் எடுப்பார். காலையில் நான் பேசியதற்கு கட்சியில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. நானே தன்னிச்சையாக தற்போது பேட்டி அளிக்கிறேன் என்றார்.