96 வயதில் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் வாக்குச் சாவடிக்கு, வீல் சேரில் வந்து வாக்களித்து கருணாநிதியை நினைவு படுத்தி சென்றிருக்கிறார் அவரது நண்பரான திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்.

’என் 18 வயதில் துணைக்கு வந்த நண்பன்’ என்று கருணாநிதியால் சிலாகிக்கப்பட்டவர் பேராசிரியர் அன்பழகன். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ரொம்பவே சோர்வடைந்து விட்ட அவரது உடல்நலம் குன்ற ஆரம்பித்தது. அடிக்கடி காய்ச்சல், சளித்தொல்லைகள் ஏற்பட்டன. அடுத்தடுத்த நாள்களில் அன்பழகனின் உடல்நிலை மோசமடைந்ததால், டிசம்பர் 28-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

நுரையீரலில் சளி தங்கியிருப்பதால் மூச்சுவிடுவதற்குச் சிரமப்படுகிறார். நுரையீரலில் உள்ள சளியை அகற்றும் சிகிச்சை எதிர் விணையை உருவாக்கி விடும் என்கிற அச்சத்தால் அந்த சிகிச்சை வேண்டாம் என அன்பழகனின் குடும்பத்தினர் முடிவெடுத்து விட்டனர். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உள்ளதால், டியூப் மூலம் சிறுநீர் வெளியேற்றம் நடக்கிறது. உணவும் டியூப் வழியாகவே செலுத்தப்படுகிறது. தற்போது வீட்டில் இருந்தே சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். 

இப்படிப்பட்ட சிரமங்களுக்கிடையே திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் வாக்குச் சாவடிக்கு, வீல் சேரில் வந்து வாக்களித்தார். அந்த வகையில் 96 வயதான அவரது மூக்கில் டியூப் பொருத்தப்பட்டு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.

இந்த வயதிலும் அவரது கடமை உணர்ச்சியை கண்டு அங்கிருந்த மக்கள் வியந்தனர். கருணாநிதியும் தனது தள்ளாத வயதிலும் இது போல் சக்கர நாற்காலியில் சென்று வாக்களிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் வழியில் க.அன்பழகனும் வாக்குச் சாவடிக்கு வந்தது அனைவருக்கும் முன்னுதாரணம் ஆகியுள்ளது.