மாநிலம் முழுவதும் திமுகவின் ஐடி விங்க் நிர்வாகிகளை குறி வைத்து கைது மற்றும் வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையில் அதிமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு களத்தில் இறங்கி வேலை செய்யும் அதே அளவிலான நிர்வாகிகளை சமூக வலைதளங்கள் மூலமாகவும் பணியாற்றச் செய்ய வேண்டும் என்பது தான் திமுகவின் வியூகம். இதற்காகவே தொகுதி வாரியாக ஐடி விங் நிர்வாகிகளை திமுக தலைமை நியமித்திருந்தது. மாவட்டம், ஒன்றியம், தொகுதிவாரியாக உள்ள நிர்வாகிகளை ஒன்றினைத்து அந்நத பகுதிகளின் பிரச்சனைகளை மையமாக வைத்து பிரச்சாரம் செய்வது, இதற்கு வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்குவது என கடந்த ஓராண்டு காலமாகவே திமுக பம்பரமாக சுழன்று வருகிறது.

இதற்காக திறமையான நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு  மாவட்ட அளவில் கூட ஐடி விங்குகளில் பதவிகளை திமுக கொடுத்தது. மேலும் படித்த பட்டதாரி இளைஞர்களும் கூட அவுட் சோர்சிங் முறையில் திமுகவின் ஐடி விங்கில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் அதீத திறமை உள்ளவர்களை கண்டறிந்து தொகுதி சமூக வலைதள பிரிவு பொறுப்பாளர்களாக கூட ஐடி விங் சார்பில் நியமிக்கப்பட்டனர். உள்ளூர் பிரச்சனைகளை கண்டறிந்து அதனை மக்கள் மத்தியில் தெரியப்படுத்தி திமுக பக்கம் அவர்களை திருப்புவது தான் இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட்.

இந்த விவகாரத்தில் சில நிர்வாகிகள் வரம்பு மீறி மீம்ஸ்கள் போட்டு சிக்கலில் சிக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். தங்களின் திறமைகளை காட்டுவதாக நினைத்து அமைச்சர்களை அவதூறு செய்யும் வகையிலும் வீடியோக்கள், ஆடியோக்களை வெளியிட்டனர். அத்துடன், சென்சிடிவான பிரச்சனைகளை கூட தங்களின் பிரச்சாரத்திற்காக திமுக ஐடி விங்கில் சிலர் பயன்படுத்திக் கொண்டனர். இதனால் அதிமுக மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் குறிப்பாக அமைச்சர்களின் ஆதரவாளர்களால் இப்படி சமூக வலைதளங்களில அவதூறு பரப்புபவர்களை கண்டுபிடித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திமுக ஐடி விங்க் நிர்வாகிகள் மீது புகார் என்றால் உடனடியாக அது குறித்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களை தேடித் தேடி கைது செய்தது போலீஸ் படை. நள்ளிரவில் சென்று வீட்டில் கதவை தட்டுவது, விசாரணைக்கு என அழைத்துச் சென்று காவல்நிலையத்தில் நாள் முழுவதும் அமர வைப்பது, வீட்டிற்கு அருகாமையில் உள்ள சிறையில் அடைக்காமல் தொலைதூரத்திற்கு அனுப்பி வைப்பது என்று திமுக ஐடி விங் நிர்வாகிகளை மனதளவில் பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டன.

இதனால் திமுக ஐடி விங்க் நிர்வாகிகள் அடக்கி வாசிக்குமாறும், அவர்களுக்கு சட்ட உதவிகள் செய்ய திமுக மேலிடம் வழக்கறிஞர்கள் குழுவையும் அமைத்தன. ஆனால் கூட சிறைக்கு சென்று வந்த நிர்வாகிகள், வழக்கு பதிவுக்கு ஆளான நிர்வாகிகள் தொடர்ந்து திமுக ஐடி விங்க் பதவிகளில் இருந்து விலகி வருகின்றனர். இது அதிமுகவே எதிர்பார்க்காத நிகழ்வு என்கிறார்கள். இதனை அடுத்து திமுக ஐடி விங்க் நிர்வாகிகள் மீதான வழக்குகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திமுக ஐடி விங்கை கலகலக்கச் செய்துவிட்டால் சமூக வலைதளங்களில் அவர்களின் பிரச்சார வியூகத்தை முறியடித்துவிடலாம் என்று புது ரூட்டில் அதிமுக பயணிக்க ஆரம்பித்துள்ளது.