இந்தியாவில் பணக்கார மாநில கட்சிகளின் பட்டியலில் திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.  
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொரு தேசிய, மாநில கட்சிகளும் ஒவ்வோர் ஆண்டும்  சொத்து விவரம், வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் 2017-18-ம் ஆண்டில் 41 மாநில கட்சிகளின் சொத்து மதிப்புகளின் தகவல் வெளியாகி உள்ளன. இந்தக் காலகட்டத்தில் 41 மாநில கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,320.06 கோடியாக இருந்துள்ளது. கடந்த 2016-17-ம் ஆண்டில் 39 மாநில கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,267.81 கோடியாகவே இருந்துள்ளது.
இந்தப் பட்டியலில் சமாஜ்வாடி கட்சி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அக்கட்சி ரூ.583.28 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2016-17-ம் ஆண்டைவிட சமாஜ்வாடி கட்சியின் சொத்து மதிப்பு 2.13 சதவீதம் உயர்ந்துள்ளது. இக்கட்சிக்குப் பிறகு அடுத்த இடத்தில் பணக்கார மாநில கட்சியாக திமுக உள்ளது. 3-வது இடத்தில் அதிமுகவும் உள்ளது. 2016-17-ம் ஆண்டுவாக்கில் திமுகவின் சொத்து மதிப்பு ரூ.183.36 கோடி. தற்போது வெளியிடப்பட்டுள்ள மதிப்பில் அது ரூ.191.64 கோடியாக உயர்ந்துள்ளது. 2016-17-ம் ஆண்டைவிட 2017-18-ல் திமுகவின் சொத்து மதிப்பு 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தை ஆளும் அதிமுகவின் சொத்து மதிப்பு 2016-17-ல் ரூ.187.72 கோடியாக இருந்தது. தற்போது அந்த மதிப்பு 189.54 கோடியாக உயர்ந்துள்ளது. மாநில கட்சிகளின் அதிக சொத்து  பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2016-17-ல் திமுகவை விட பணக்கார கட்சியாக அதிமுகவே இருந்துள்ளது. தற்போது அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுக முன்னேறியுள்ளது. 
தமிழகத்தில் உள்ள பாமக சொத்து மதிப்பு 2016-17-ல் ரூ.2.63 கோடியாகவும், 2017-18-ல் ரூ.2.59 கோடியாக குறைந்துள்ளது. இதேபோல தேமுதிகவின் சொத்து மதிப்பு ரூ. 67 லட்சத்திலிருந்து ரூ. 87 லட்சமாக உயர்ந்துள்ளது.