நாடாளுமன்றத் தேர்தல் ஜுரம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவு செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில் அண்மையில் வட இந்திய தொலைக்காட்சிகள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதலில் கருத்துக் கணிப்பு வெளியிட்ட ரிபப்ளிக் டீவி தமிழகத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு தொகுதியில் கூட ஜெ%யிக்காது என்றும்,  காங்கிரஸ் - திமுகவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி  புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளை வெல்லும் என்று தெரிவித்திருந்தது.

ஏபிபி சி வோட்டர் சர்வேயிலும்  வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  திமுகதான் 40  தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.,

இதே போல் இந்தியா டுடே கார்வி இன்சைட்ஸ் கருத்து கணிப்பின்படி தமிழகத்தை பொறுத்தவரை 40 இடங்களையும் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் பெறும் என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே நேற்று  டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களில் 36 இடங்களை திமுக - காங்கிரஸ் கூட்டணி வெல்லும். அதிமுக கூட்டணி 4 இடங்களை வெல்லும். பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் வைக்காவிட்டால் ஒரு இடங்களை கூட வெல்லாது என்றும் குறிப்டப்பட்டிருந்தது.

இதையடுத்து தமிழகத்தில் திமுக மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்பது உறுதியாகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே திமுக அனைவரும் திரும்பிப் பார்க்கும் ஒரு கட்சியாக உருவெடுத்துள்ளது. இதை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.