நீட் எப்போது யார் ஆட்சியில் வந்தது? யார் அறிமுகப்படுத்தினார்கள்? பதில் சொல்லுங்கள் என மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்;- மத்திய அரசு நீட் தேர்வை தமிழகத்தில் திணித்தபோது வேடிக்கை பார்த்தது அதிமுக. நீட் தேர்வு விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு ஆதரவளித்தது திமுக. 3 வருடங்களாக மசோதாவிற்கு ஒப்புதல் பெறாமல் இருந்தது அதிமுக அரசு தான் என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வை எதிர்த்த சட்டப்பேராட்டத்தில் தோற்றுபோனது அதிமுக என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

இதனையடுத்து, நீட் தேர்வு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, நீட் எப்போது யார் ஆட்சியில் வந்தது? யார் அறிமுகப்படுத்தினார்கள்? பதில் சொல்லுங்கள்" என பேரவையில் முதல்வர் ஆவேசமாக பேசினார். 2010 இல் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது நீட் தேர்வுக்கு சட்டம் கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தபோது திமுக கூட்டணியில் இருந்ததா, இல்லையா? என ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலை செய்துகொண்டதற்கு திமுகதான் காரணம். கூட்டணியிலிருந்த திமுக நாட்டை குட்டிச்சுவராக்கி உள்ளது. இதனால் தான் 13 பேர் மரணமடைந்துள்ளனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொந்தளித்தார்.