திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக மோதுவதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் பாஜகவை முதன்மையான கட்சியாக முன்னிறுத்தும் வியூகத்துடன் அந்த கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா களம் இறங்கியுள்ளார்.

தமிழக பாஜகவின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த செயற்குழுவை டெல்லியில் இருந்து அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். ஆனால் அதில் அதிகம் கவனம் பெற்றது, திமுகவிற்கு எதிராக நட்டா பயன்படுத்திய வார்த்தைகள் தான். அதாவது, தேசியத்திற்கு எதிரான உணர்வுகளை திமுக தூண்டி வருவதாக பேசினார் நட்டா. மேலும் தேசி நீரோட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை திமுக எப்போதுமே கடைபிடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக வளர்ச்சிப்பணிகளுக்கு எதிரான ஒரு கட்சி என்றும் கடுமையாக விமர்சித்தார் நட்டா. தேச நலனுக்கு எதிரானவர்களின் கூடாராமாக தமிழகத்தில் திமுக திகழ்ந்து வருவதாகவும் நட்டா குறிப்பிட்டார். எனவே திமுகவை உன்னிப்பாக கவனித்து அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.மேலும் திமுகவிற்கு எதிரான பேச்சுகளின் போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக என்பதை குறிப்பிட நட்டா மறக்கவில்லை. இதன் மூலம் மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக மோதலை துவக்கி வைத்தார் நட்டா. பாஜகவின் அகில இந்திய தலைவராக நட்டா இருப்பதால், திமுகவிற்கு எதிரான அவரது பேச்சு அகில இந்திய அளவில் கவனம் பெற்றது.

மிக முக்கியமான வட இந்திய ஊடகங்கள் திமுகவிற்கு எதிரான நட்டாவின் பேச்சை கவர் செய்தன. இந்த நிலையில் நட்டாவிற்கு நேரடியாக மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டார். அதில் தமிழர்களுக்கும், தமிழர் பண்பாட்டிற்கும் எதிரான கட்சி பாஜக என்று ஸ்டாலின் கூறியிருந்தார். ஆள்பிடிக்கும் அரசியலைத் தமிழ்நாட்டிலும் நடத்த முயற்சிக்கும் பாரதீய ஜனதா கட்சிதான், தமிழகத்தின் பண்பாட்டிற்கும் - இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும் - ஜனநாயக மாண்புகளுக்கும் - நாட்டின் அரசியல் சட்டத்திற்கும் ஒரே எதிரியாகத் திகழ்கிறது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார். அதாவது நட்டா எதிர்பார்த்தபடியே மோதலை தீவிரப்படுத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின். தமிழகத்தை பொறுத்தவரை எப்போதும் தேர்தல் களம் திமுக மற்றும் அதிமுக இடையிலானதாகவே இருக்கும். இங்கு கடந்த பல ஆண்டுகளாக மூன்றாவது அணிக்கான வாய்ப்புகள் உருவாகவே இல்லை. எனவே திமுக அல்லது அதிமுகவுடன் நேரடியாக மோதினால் மட்டுமே தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க முடியும் என்பது தான் நட்டாவின் வியூகம் என்கிறார்கள். தற்போதைய சூழலில் அதிமுக பாஜக கூட்டணியில் உள்ளது. மேலும் பாஜகவின் கொள்கைகளுக்கு நேரெதிர் கொள்கை கொண்ட கட்சி திமுக.

இதனால் திமுகவிற்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தினால் அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களை தங்கள் ஆதரவாளர்களாக்கலாம் என்கிற புதுக்கணக்கின் அடிப்படையிலேயே ஸ்டாலினை வெளிப்படையாக விமர்சித்து நட்டா பேசினார் என்கிறார்கள். மேலும் கூட்டணியில் இருந்து தங்களை அதிமுக வெளியேற்றும் பட்சத்தில் திமுகவிற்கு எதிரான பிரதான கட்சியாக பாஜகவை உருவகப்படுத்தவும் ஸ்டாலினுடனான மோதல் உதவும் என்று நட்டா நம்புவதாக கூறுகிறார்கள். இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தான் செயற்குழு கூட்டத்தில் நட்டா திமுகவையும் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் பொதுவாக பாஜக மாநில நிர்வாகிகளுக்கு பதில் சொல்வதில்லை. ஆனால் நட்டா போன்றவர்களின் விமர்சனத்திற்கு அவர் பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அடுத்தடுத்த நாட்களில் டெல்லியில் நட்டா உள்ளிட்ட சீனியர் தலைவர்களிடம் இருந்து ஸ்டாலினுக்கு எதிரான வலுவான பேச்சுகள் வெளிப்படும் என்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக தமிழக அரசியல் களம் திமுக vs பாஜக என்று மாற்றப்படும் என்று கூறி சிரிக்கிறார்கள் பாஜகவினர்.