நாட்டில் மதச்சண்டை, இனச்சண்டை எல்லாவற்றையும் தூண்டிவிட்டு அதில் குளிர் காய்கின்ற கட்சிதான் திமுக என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசிய அவர், ’’எம்.ஜி.ஆருக்கு 103 வயது ஆகிவிட்டது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். லதாவை தூக்கிக்கொண்டு டூயட் பாடும் எம்ஜிஆரை தான் அனைவருக்கும் தெரியும். எம்ஜிஆர் இளமையாகவே இருந்தார். எளிமையாகவே வாழ்ந்தார். இளமையாகவே மறைந்தார். வாழுகிற வரை, இறக்கிற வரை மக்களுக்காகவே உழைத்துக்கொண்டு இருந்தார்.

அதிமுக இயக்கத்தை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தால் எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி பரிசாக காத்திருக்கிறது. அதிமுகவை வீழ்த்துவதற்கு இன்னொருவன் பிறந்துதான் வரவேண்டும். நாட்டில் இனச்சண்டை, மதச்சண்டை எல்லாவற்றையும் தூண்டிவிட்டு அனைவரையும் சண்டை போட வைத்து அதில் குளிர் காய்கின்ற கட்சி திமுக. குத்து சண்டை, சிலம்பாட்டம் போன்ற வித்தைகளை தெரிந்தவர்கள் அதிமுகவினர். கழகத்தின் கட்டுப்பாட்டிற்க்காக அனைவரும் ஒழுக்கமாக இருக்கிறார்கள். திமுக காரர்கள் சண்டைபோட்டு ஜெயிக்க நினைத்தால் எந்த காலத்திலும் அதிமுகவை ஜெயிக்க முடியாது.

மக்கள் வாக்களிப்பதில் ஒரு தடவை தவறு செய்தால் 5 வருடங்களுக்கு திமுகவினரை கேள்வி கேட்க முடியாது. திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் ஒன்றியத்தில் ஊழல் செய்து ரசீது போடச் சொல்வார்கள். எல்லாவிதமான சித்து விளையாட்டுகளும் தெரியும். உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் சற்று அடங்கி போனோம். அதில் ஒரு சில இடங்களில் கொஞ்சம் திமுகவினர் விளையாடி பார்த்தனர். ஆனால் தமிழகத்திலேயே அதிகப்படியான மாவட்ட கவுன்சிலர்கள் வெற்றி பெற்ற மாவட்டம் விருதுநகர் மாவட்டம். திமுகவை பொருத்தமட்டில் அது ஒரு திருட்டு கட்சி. மக்களை ஏமாற்றும் கட்சி’’ என்று அவர் பேசினார்.