இந்தியாவிலேயே கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரே கட்சி திமுகதான் என்றும் அந்தக் கட்சியை இந்தத் தேர்தலோடு காணாமல் போகச் செய்ய வேண்டும் என தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.நாகராஜன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை, இளையான்குடி பஸ் நிலையம், மானாமதுரை தேவர் சிலை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தல் நாட்டிற்கு மிக முக்கியமான தேர்தல் ஆகும். நாடு முன்னேற்றம் அடைய மத்தியில் நிலையான, வலிமையான, திறமையான, உறுதியான பிரதமர் வேண்டும்.

அண்டை நாடுகள் இந்திய நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை நாட்டிலே ஊடுருவச்செய்து, நம் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்த நேரத்தில் இந்திய நாட்டிற்கு வலிமையான, திறமையான, உறுதியான பிரதமர் வேண்டும். அத்தகைய ஆற்றல் உள்ள பிரதமர் தான் நரேந்திரமோடி என தெரிவித்தார்..

தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி ஒரு அராஜக கூட்டணி, ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. அந்த கூட்டணி மக்களிடத்தில் நம்பிக்கையை இழந்துவிட்டது. ஸ்டாலின் ஒரு கவுன்சிலருக்கு கூட தகுதி இல்லாதவர் என வைகோ கூறினார்.
ஆனால் தற்போது மீண்டும் இந்த கூட்டணியுடன் சேர்ந்து கொண்டு, ஸ்டாலினை முதலமைச்சராக்கி ஆட்சி அதிகாரத்தில் அமர வைப்பேன் எனப் பேசிவருகிறார்.

இந்தியாவிலேயே கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரே கட்சி தி.மு.க. தான். இந்த தேர்தலில் துரோகிகளுக்கு, பொதுமக்கள் தக்க பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
