dmk initiated all party meeting will be held on coming twenty third

காவிரி நதிநீர் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க திமுக சார்பில் வரும் 23ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் அண்மையில் இறுதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கான நீரை 192 டிஎம்சியிலிருந்து 177.25 டிஎம்சியாக குறைத்தது. 14.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. தமிழகம் சார்பில் முறையான வாதங்கள் முன்வைக்கப்படாடதது தான் இதற்குக் காரணம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும் என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் ஆளும் தரப்பில் ஸ்டாலினின் வலியுறுத்தலை பொருட்படுத்தவில்லை. 

இதையடுத்து திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த கூட்டத்திற்கு அதிமுக, பாஜவிற்கும் அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் கலந்துகொண்டால், வரவேற்பதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

புதிய கட்சி ஆரம்பித்து அரசியலில் களமிறங்கும் கமலுக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில் கலந்துகொள்வதாக கமல் தெரிவித்ததாகவும் ஸ்டாலின் கூறினார்.

இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் கூட்டப்படும் இந்த அனைத்து கட்சி கூட்டம் எந்த அளவிற்கு பயனளிக்கிறது? கமல் கலந்துகொள்கிறாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.