திமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக திமுக எம்எல்ஏ  பூங்கோதை ஆலடி அருணா அதிகளவில் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

திமுகவின் முக்கிய பெண் எம்எல்ஏக்களில் ஒருவர் பூங்கோதை ஆலடி அருணா. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தவர். தற்போது எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவர் திமுகவின் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். பூங்கோதை, ஒரு தொழில்முறை பெண்கள் சிறப்பு பட்டம் பெற்ற மருத்துவர். இவர் தந்தை ஆலடி அருணா முன்னாள் தமிழக அமைச்சராவார். 

இந்நிலையில், திமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக திமுக எம்எல்ஏ  பூங்கோதை ஆலடி அருணா நேற்று இரவு அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நெல்லையில் உள்ள ஷூபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து தற்போது இவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, இது தொடர்பாக தீவிரமாக விசாரித்த போது தென்காசி மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபனுக்கும் இவருக்கும் சிறு மனகசப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீவலப்பேரி பாண்டியன் என்பவர் பூங்கோதை ஆலடி அருணாவை மனகசப்பில் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.  மேலும், அவரது குடும்ப உறவுகளுக்கு இடையே ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுவதிலும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் மனம் உடைந்த பூங்கோதை இரவு தூங்கச் செல்லும் முன் கூடுதலாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலையில் நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்காத நிலையில் அங்கு சென்று பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.