ஸ்டாலினை சுற்றி நடக்கும் இந்த பஞ்சாயத்தை ஏஸியாநெட் தமிழ் இணையதளம் ஏற்கனவே கோடிட்டுக் காட்டியிருந்தது. இப்போது அந்த விவகாரம் பெரிதாய் வெடித்துக் கிளம்பியிருக்கிறது. 

கருணாநிதிக்குப் பிறகு தி.மு.க.வின் தலைவராக ஆகிவிட்டார் ஸ்டாலின். இந்நிலையில் அவரது நிழலாக, தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவராக ஆகப்போவது யார்? என்பதில்தான் பெரும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ரேஸில் துரைமுருகன் இல்லை. காரணம் ஸ்டாலினின் அரசியல் கைடாக அவருக்கான இடம் பிரத்யேகமாக இருக்கிறது. 

ஆனால் இந்த இரண்டாம் கட்ட தலைவர்களில் பிரதானமானவர் யார்? எனும் போட்டியில் எ.வ.வேலு, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெ.அன்பழகன் ஆகியோர் முட்டி மோதிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இவர்களில் வேலுவின் கரங்கள்தான் மிகவும் ஓங்கி இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது. 

நீலகிரி தனி தொகுதியான பின் அங்கே எம்.பி.யானார் ஆ.ராசா. அதன் பிறகு கொங்கு மண்டலம் முழுக்கவே கோலோச்ச துவங்கினார். அப்பேர்ப்பட்ட ராசாவுக்கே கடந்த சில மாதங்களாக செக் வைத்துவிட்டார் வேலு! என தகவல். கொங்கு மண்டலத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளிலும் வேலுவின் ஆதிக்கமே பொங்கி வழிகிறதாம். இதனால் அந்த மண்ணில் தனக்கு மதிப்பில்லாமல் போய்விட்டதாக ராசா புழுங்குகிறாராம்.

 

 இந்த சூழ்நிலையில் வேலுவின் அடுத்த விக்கெட்டாகியிருக்கிறார் ஐ.பெரியசாமி என்கிறார்கள். கழகத்தின் சீனியர் மோஸ்ட் மனிதரான பெரியசாமி. கழகத்தில் பெரும் பதவிகளை ஆசை தீர ருசித்துவிட்ட பெரியசாமி, அடுத்து தனது மகன் செந்தில்குமாரை அந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்த முயல்கிறார். கருணாநிதி அமைச்சரவையில் தான் கோலோச்சியது போல், ஸ்டாலினின் அமைச்சரவையில் செந்திலை அமர்த்திட முயன்றார் பெரியசாமி. 

இதற்குத்தான் வேலு பெரும் தடைகளை உருவாக்கியிருக்கிறார் என்கிறார்கள். தி.மு.க. தலைமை தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் லிஸ்டிலும் செந்தில் பெயர் இல்லை, அதேபோல் மக்களவை தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியலில் திண்டுக்கல் பெரியசாமியை கொண்டு போய் ராமநாதபுரத்துக்கு போட்டுள்ளார்கள். இவை இரண்டுமே வேலுவின் பிரஸரால்  தங்களுக்கு நடந்த அநியாயங்களாக பெரியசாமி  தரப்பு நினைக்கிறது! என்கின்றனர் தி.மு.க.வினர். 

கட்சிக்காக தங்கள் குடும்பம் நெடுங்காலம் உழைத்திருக்கிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வந்து ஒட்டிக் கொண்ட வேலு, தன் பண பலத்தால் தங்களை ஒடுக்க நினைத்தால் நிச்சயம் வேலுவுக்கு செக் வைக்கும் வகையில் அறிவாலயத்திலேயே பெரும் களேபரத்தை நிகழ்த்திட பெரியசாமியும், செந்திலும் தயங்கிட மாட்டார்கள்! என்கிறார்கள். அப்படியொரு சம்பவம் நிகழ்ந்தால், வேலுவால் பாதிக்கப்பட்ட பழைய சீனியர்களும் இந்த அப்பா - மகனோடு இணைந்து கொண்டு அதகளப்படுத்திவிடுவார்கள் என்பதே ஹாட் தகவல். இதற்கிடையில் வேலுவின் ஹிட் லிஸ்டில் அடுத்து இருப்பது யாரோ? என்பதுதான் தனி பரபரப்பு.