மக்களவை தேர்தல், 18 தொகுதி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் முதல் தளம், கட்சியின் ‘வார் ரூம்' ஆக மாற்றப்பட்டுள்ளது. 

கட்சியின் வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சமூக வலைதள ஊழியர்கள் உள்ளிட்டோர் செய்தி சேனல்கள், இணையதளத்தில் திமுக தொடர்பாக வரும் செய்திகள், பரவும் தகவல்கள், சமூக வலைதள பதிவுகள் என அனைத்தையும் கவனமாக நோட்டமிட்டு வருகின்றனர். 

இந்த அறைக்கு வார் ரூம் எனப் பெயரிட்டுள்ளனர். அவர்களின் முக்கிய நோக்கம், எதிர்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால், அதை ஆதாரப் பூர்வமாக கண்டுபிடித்து புகார் அளிப்பதுதான். சமீபத்தில் நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் ராதாரவியின் சர்ச்சைக்குரிய கருத்துக்குப் பின்னர், அவர் திமுக-விலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார். இந்த உடனடி நடவடிக்கைக்குக் காரணம் திமுக அமைத்துள்ள இந்த வார் ரூம் குழுவினரும் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வார் ரூம் குழுவினர் கூறுகையில், “ராதாரவி விவகாரம் இணையதளத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்த விவகாரம் குறித்து கட்சி தலைமைக்கு தகவல் கொடுத்தோம். அதனால் தான் உடனடியாக ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.  தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் இணையதளத்தின் மூலம் பெரும் தாக்கத்துக்கு உள்ளாகின்றனர். ஆகையால் திமுக பற்றிய நெகட்டிவ் செய்திகள் வந்தால் அது குறித்தும் நடவடிக்கை எடுக்க தலைமைக்கு எடுத்துச் சொல்கிறோம்” எனக் கூறுகின்றனர்.