தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்று திமுகவினருக்கு கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்று திமுகவினருக்கு கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக எதிர்கட்சியாக இருந்த போது பிரதமர் மோடியின் ஒவ்வொரு தமிழகப் பயணத்தின் போதும், Go back Modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்படும். அதுமட்டுமில்லாமல், பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக் கொடி காட்டுவதுடன், கருப்பு பலூனும் பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமாகும். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் இந்த செயலுக்கு பாஜக, அதிமுக கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

இந்த நிலையில் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் ஜனவரி 12 ஆம் தேதி தமிழக வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக அரசு அமைந்த பிறகு, பிரதமர் மோடி தமிழகம் வருவது இதுவே முதல்முறையாகும். இதனிடையே, பிரதமரின் தமிழக வருகை தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு, Go back Modi என்ற ஹேஷ்டேக் மீண்டும் டிரெண்ட் செய்யப்பட்டது. இது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனிடையே, பிரதமர் மோடியின் வருகைக்கு திமுக கருப்புக் கொடி காட்டுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், பிரதமர் தங்களின் விருந்தாளி, அப்படியிருக்கையில் அவருக்கு எப்படி கருப்புக் கொடி காட்ட முடியும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்டது.

இது வெறும் வாய்மொழியாக இருந்த நிலையில் தற்போது கட்சி தலைமையிடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து திமுக தலைமை தனது ஐடி விங்கிற்கு நேரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், பிரதமர் மோடியின் வருகையின் போது ஆர்வக் கோளாறில் ஐடி விங்கைச் சேர்ந்த யாரேனும் பிரதமருக்கு எதிராக ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து சிக்கலை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக, யாரும் அதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது. பிரதமர் மோடிக்கு எதிரான செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்று திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது திமுக அரசின் நற்பண்பையும் விருந்தாளிகளை மரியாதையுடன் வரவேற்கும் குணத்தையும் வெளிப்படுத்துகிறது.