அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் மற்றும் பன்நோக்கு மருத்துவ பணியாளர்களை முந்தைய ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒற்றை கோணத்தில் மட்டும் தமிழக அரசு பார்க்கக்கூடாது.
அம்மா மினி கிளினிக்குகளில் கட்டமைப்புக் குறைபாடுகளோ அல்லது மனிதவள பற்றாக்குறையோ இருந்தால் அவற்றை சரி செய்து, மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்படுவதை உறுதி செய்வது தான் தமிழ்நாடு அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, மூடுவது அல்ல என ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு முழுவதும் மூடப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றி, மாற்றுப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த 1820 மருத்துவர்களும், சுமார் 2000 பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களும் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசுத் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளுக்கு மாறாக மருத்துவர்களும், பிற பணியாளர்களும் நீக்கப்பட்டிருப்பது மனிதநேயமற்றது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில், மக்களுக்கு காய்ச்சலைக் கண்டுபிடித்து மருத்துவம் அளிப்பதற்காகவும், தடுப்பூசி செலுத்துவதற்காகவும், மாநிலம் முழுவதும் 1950 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பொறுப்பேற்ற திமுக அரசு, அம்மா மினி கிளினிக்குகளை மூட முடிவு செய்தது. அதன்படி இம்மாதத் தொடக்கத்தில் அம்மா கிளினிக்குகள் மூடப்பட்டு, அவற்றில் பணியாற்றி வந்த 1820 மருத்துவர்களும், பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கும் கொரோனா நோய்ப்பரவல் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு மார்ச் மாதம் வரை பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக பணி நீக்க ஆணை வழங்கப்படவில்லை. மாறாக, வாய்மொழி ஆணை மூலம் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை. பணி நீக்கத்தைக் கண்டித்து கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அரசு பதில் கூறாமல் அமைதி காக்கிறது.

அம்மா மினி கிளினிக் மருத்துவர்களுக்கு ரூ.60 ஆயிரமும், பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.6 ஆயிரமும் மாத ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. அவர்கள் அனைவரும் ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் தமிழக அரசே இதை செய்திருக்கிறது. எந்தக் காரணத்தைக் கூறினாலும் இதை அரசால் நியாயப்படுத்த முடியாது. தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வந்த அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கூறப்படும் காரணம், அவற்றில் போதிய வசதிகள் செய்யப்படவில்லை; செவிலியர்கள் கூட நியமிக்கப்படவில்லை என்பது தான். தமிழக அரசின் குற்றச்சாட்டு உண்மையும் கூட. ஆனால், அம்மா மினி கிளினிக்குகளுக்கு அனைத்து இடங்களிலும் தேவை இருப்பதை அரசு மறுக்கவில்லை; மறுக்கவும் முடியாது.
இத்தகைய சூழலில் மினி கிளினிக்குகளில் கட்டமைப்புக் குறைபாடுகளோ அல்லது மனிதவள பற்றாக்குறையோ இருந்தால் அவற்றை சரி செய்து, மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்படுவதை உறுதி செய்வது தான் தமிழ்நாடு அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, மூடுவது அல்ல.ஒருவேளை மினி கிளினிக்குகளுக்கு தேவை இல்லை என்று அரசு கருதினால், அவற்றில் பணியாற்றி வந்த மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தலாம். தமிழ்நாடு முழுவதும் கிராமப்பகுதிகளில் 1807 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகரப் பகுதிகளில் 460 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2267 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவை தொடக்க காலத்தில் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே புற நோயாளிகள் சேவைகளை வழங்கி வந்தன. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம் இவை மேம்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் மகப்பேறு உள்ளிட்ட வசதிகளை வழங்கி வருகின்றன. இவற்றுக்கான மருத்துவர்கள் தேவை அதிகரித்து இருப்பதால் நீக்கப்படும் மருத்துவர்களை சுகாதார நிலையங்களில் பணியமர்த்தலாம். எனவே, அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் மற்றும் பன்நோக்கு மருத்துவ பணியாளர்களை முந்தைய ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒற்றை கோணத்தில் மட்டும் தமிழக அரசு பார்க்கக்கூடாது. அவர்களின் வாழ்வாதாரம், தமிழக அரசின் தொடக்கநிலை மருத்துவ மையங்களில் சேவையை வலுப்படுத்துவதற்கான மருத்துவர்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
